புதுச்சேரி சபாநாயகரானார் பாஜக எம்எல்ஏ செல்வம்!

 

புதுச்சேரி சபாநாயகரானார் பாஜக எம்எல்ஏ செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியானது. அதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வென்றது. ஆறில் சுயேச்சையும் எட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. பெரும்பான்மை பாஜக கூட்டணிக்கே இருந்ததால் முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

புதுச்சேரி சபாநாயகரானார் பாஜக எம்எல்ஏ செல்வம்!

அவர் குணமடைந்து வந்த பின்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் சபாநாயகர் பதவியும் 2 அமைச்சர் பதவியும் பாஜகவிற்கு வழங்க சம்மதம் தெரிவித்தார் ரங்கசாமி. என்ஆர் காங்கிரஸுக்கு 3 அமைச்சர் பதவியும் துணை சபாநாயகர் பதவியும் என முடிவு செய்யப்பட்டது. முடிவு எட்டப்பட்டதால் தற்போது பதவியேற்பு பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இதனிடையே 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இது ஆரம்பத்தில் சர்ச்சையானாலும் சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்தது.

புதுச்சேரி சபாநாயகரானார் பாஜக எம்எல்ஏ செல்வம்!

இதனால் ஒட்டுமொத்தமாக 22 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இன்று நடைபெறவிருந்த சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் எம்எல்ஏ செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான மனுவை நேற்று முன்தினம் சட்டப்பேரவை செயலரிடம் அளித்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் தான் சபாநாயகர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராவது இதுவே முதல் முறை. அதேபோல 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர்.

புதுச்சேரி சபாநாயகரானார் பாஜக எம்எல்ஏ செல்வம்!

இன்று காலை கூடிய சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவரை பதவியேற்க அழைத்தார். அவை முன்னவரான முதலமைச்சர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித் தலைவரான திமுக சிவாவும் சபாநாயகரை அழைத்துச்சென்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர், புதிய சபாநாயகரை எம்எல்ஏக்கள் வாழ்த்தி பேசினர். துணை சபாநாயகராக லட்சுமிநாராயணன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.