6 மாதங்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்
6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் ஏற்கனவே செயலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்தது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமலாக்க துறை முதலில் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி இரவு 9 மணி அளவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த ஜாமீனை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் நாடிய அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்த போதிலும் அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம் மதுபான கொள்கை ஊழல் வழக்கை கையில் எடுத்த சிபிஐ போலீசார், ஜூலை 2வது வாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். இதனால் ஜாமின் கிடைத்தும் அவர் சிறையிலேயே இருந்து வந்தார். அதேநேரம், சிபிஐ கைதை எதிர்த்தும், ஜாமின் வழங்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
#WATCH | டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
— Sun News (@sunnewstamil) September 13, 2024
கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான ED, CBI வழக்குகளில் ஜாமின் கிடைத்ததால் விடுதலை#SunNews | #ArvindKejriwal |… pic.twitter.com/ia7euCeM42
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் , உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்ற எண்ணத்தை அகற்றி, அது கூண்டில் அடைக்கப்படாத கிளி என்பதைக் காட்ட வேண்டும். சிபிஐ சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும், ED வழக்கில் பிணை பெற்ற கெஜ்ரிவாலை சிறையில் வைத்திருப்பது நீதியின் கேலிக்கூத்தாக இருக்கும். கைது அதிகாரத்தைப் பயன்படுத்துதல் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும் , இலக்கு வைக்கப்பட்ட துன்புறுத்தலுக்கு சட்டத்தை பயன்படுத்த முடியாது என்று ஏற்கனவே பல வழக்குகளில் கூறப்பட்டுள்ளது எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கினர். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான ED, CBI வழக்குகளில் ஜாமின் கிடைத்ததால் 6 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வந்தார் . கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம் ஆத்மி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.