வெள்ளத்தில் மூழ்கிய அரசு பஸ்கள்... 12 பேர் உயிரிழப்பு; 30 பேரை காணவில்லை!

 
நீரில் மூழ்கிய அரசு பேருந்து

தமிழ்நாட்டை கடந்த ஒரு வாரமாக உலுக்கியது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி. தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வேறோரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர மாநிலத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் தான் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. விடாது  பெய்யும் கனமழையால் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.நீரில் மூழ்கிய அரசு பேருந்து

செய்யாறு ஓடை நிரம்பியதால் நந்தலூர், ராஜாம்பேட்டை மற்றும் பிற பகுதிகளைச் சுற்றியுள்ள குண்டலூர், சேஷமாம்பாபுரம், மண்பள்ளே உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த வழித்தடங்கள் வாயிலாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. ராஜம்பேட்டை-நந்தலூர் வழியாக சென்ற இரண்டு பேருந்துகள் பாதியளவு வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், ஒரு பேருந்து முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டது.

இதனால் தப்பிக்க முடியாமல் 12 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கோரின் நிலை என்னவென்றே தெரியவில்லை. நந்தலூரில் 3 பேரின் உடல்களும் குண்டலூரில் 7 பேரின், ராயவரத்தில் 3 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. அனந்தபூர் மாவட்டம் வெல்துர்த்தி கிராமத்தில் சித்ராவதி ஆற்றில் சிக்கித்தவித்த 10 பேர் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். 


அதேபோல ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. திருமலை திருப்பதி கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துகொண்டுள்ளது. சாலைகளில் பேருந்துகளும் கார்களும் அடித்துச் செல்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மாநிலக் குழுவினருடன் இணைந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டும் வருகின்றனர். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விமானத்தில் இருந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளார்.