"சிலைக்கு கை உடஞ்சிருச்சு" - கண்ணீர் விட்ட பூசாரி; கட்டு போட்ட மருத்துவர்கள்!

 
சிலைக்கு மருத்துவம்

கடவுள் மீதான மூட நம்பிக்கை எப்பேர்பட்ட காரியத்தையும் செய்ய தூண்டும். கடவுள் இருக்கிறார், இல்லை என்பதைத் தாண்டி கண்மூடித்தனமாக அனைத்தையும் நம்புவார்கள். ஒருசிலரோ கடவுள் சிலைக்கு கூட உயிர் இருக்கிறது என நம்பிக் கொண்டிருப்பார்கள். அப்படி தான் கொரோனா பரவலின்போது உத்தரப் பிரதேசத்தில் கடவுள் சிலைகளைக்கு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை செய்தார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு சம்பவம் தான் அதே உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.

Image

ஆக்ராவிலுள்ள பத்வாரி கோயிலில் 35 வருடமாக பூசாரியாகப் பணியாற்றி வருபவர் லேக் சிங். தினமும் கடவுள் கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்வார். அப்படியாக இன்று காலை எப்போதும் போல சிலைக்கு பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார் லேக் சிங். அந்த வகையில் கிருஷ்ணர் சிலையை துடைத்துக் கொண்டிருந்தபோது லேக் சிங் அதனை கைதவறி கீழே போட்டுள்ளார். இதனால் சிலையின் ஒரு கை உடைந்து போய்விட்டது. இதனால் பதறி துடித்த பூசாரி லேக் சிங், சிலையை தூக்கி கொண்டு அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். 


அங்கே சென்று மருத்துவர்களிடம் கிருஷ்ணர் சிலைக்கு சிகிச்சை பார்க்குமாறு கோரியுள்ளார். ஆனால் அவர் சொல்வதைப் பொருட்படுத்தாமல், சிலைக்கு எப்படி சிகிச்சை பார்க்க முடியும் என்று கேட்டுள்ளனர். மேலும் இங்கிருந்து செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த லேக் சிங் மருத்துவமனையிலேயே அழ தொடங்கியுள்ளார். அவரின் ஆர்ப்பாட்டம் தாங்க முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணா என்ற பெயரில் சிலையை நோயாளியாக அனுமதித்து பரிசோதனை செய்து உடைந்த சிலையின் கைக்கு கட்டு போட்டு அனுப்பியுள்ளனர்.