முதல்ல எம்.பி.களுக்கான அனைத்து வசதிகளையும் ரத்து செய்யுங்க.. அப்புறம் விவாதத்தை தொடங்குங்க.. வருண் காந்தி

 
வருண் காந்தி

எம்.பி.களுக்கான ஓய்வூதியம் உட்பட அனைத்து வசதிகளையும் ரத்து செய்து விட்டு (இலவச கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து) விவாதத்தை ஏன் தொடங்கக் கூடாது என்று வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் நோக்கில், இலவச அறிவிப்புகளை அள்ளி விடுகின்றன. தற்போது இது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதற்கு எதிராக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி, இலவச கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க கோரி நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.

இலவச வாக்குறுதிகள்

இதற்கு எதிரொலியாக வருண் காந்தி டிவிட்டரில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை குறிப்பிட்டு காட்டுவதற்கு முன், நாம் உள்ளே பார்க்க வேண்டும். எம்.பி.களுக்கான ஓய்வூதியம் உட்பட அனைத்து வசதிகளையும் ரத்து செய்துவிட்டு விவாதத்தை ஏன் தொடங்கக்கூடாது என பதிவு செய்து இருந்தார்.

உச்ச நீதி மன்றம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிமன்றம், தேர்தல்களின்போது அறிவிக்கப்பட்ட இலவசங்களின் தீவிரமான பிரச்சினையில் விவாதம் செய்து, அதை சமாளிக்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கொண்டு வருமாறு மத்திய அரசு, நிதி ஆயோக் மற்றும் நிதி ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற பங்குதாரர்களை கேட்டுக்கொண்டது. இந்த நடைமுறை (இலவச வாக்குறுதிகள்) தொடர வேண்டும் என அனைவரும் விரும்புவதால் எந்த அரசியல் கட்சியும் இது போன்ற இலவசங்களை வழங்குவதை எதிர்க்காது அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்க விரும்பாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.