“இந்தி தெரியாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்” - உ.பி அமைச்சர் சர்ச்சை கருத்து...

 
அமைச்சர் சஞ்சய் நிஷத்

  இந்தியாவில்  இந்தி தெரியாதவர்களுக்கு இடமில்லை என்றும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்றும், இந்தியை அலுவல் மொழியாக்கும் நேரம் வந்துவிட்டாதாகவும் பேசியிருந்தார். அவரது இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  பின்னர் அந்த விவகாரம் சற்று ஓய்ந்ததை அடுத்து,  சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்  ,  'இந்தியாவின் தேசிய மொழி இந்தி'  எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார்.  அவரது கருத்துக்கு  சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின..  
 அமைச்சர் சஞ்சய் நிஷத்
பின்னர்,  நாட்டின் அனைத்து மொழிகளையும் தான்  சமமாக மதிப்பதாகக் கூறி  அந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தார்.  இந்த நிலையில் இந்தி மொழி விவகாரம் குறித்து செய்தியாளர்கள், இன்று உத்தரப்பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷத்திடம் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “ இந்தியாவில் வாழ விரும்புகிறவர்கள் இந்தி மொழியை கட்டாயமாக நேசிக்க வேண்டும்.  நீங்கள் இந்தியை விரும்பவில்லை என்றால்  நீங்கள் வெளிநாட்டவர் என்றோ அல்லது வெளிநாட்டு சக்திகளுக்கு துணைப் போகிறவர்கள் என்று அர்த்தம்.

அமைச்சர் சஞ்சய் நிஷத்

நாங்கள் பிராந்திய மொழிகளை மதிக்கிறோம். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், இந்தியா ‘இந்துஸ்தான்’ என்று நமது அரசியலமைப்பு சட்டமே கூறுகிறது. அப்படியென்றால், இந்துஸ்தான் என்பது இந்தி பேசுபவர்களின் இடம் என்று பொருள்..  இது  இந்தி தெரியாதவர்களுக்கான  இடம் கிடையாது. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது  செல்ல வேண்டும்” என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.