விமானத்தில் திடீரென மயங்கிய பயணி - முதலுதவி அளித்த தமிழிசை

 
tamilisai

டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அந்த நபருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். 

இன்று காலை டெல்லியில் இருந்து ஐதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண், யாராவது மருத்துவர்கள் இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக எழுந்து நான் இருக்கிறேன் என்ன ஆனது என கேட்டுள்ளார்.


அப்போது அந்த பணி பெண் பயணி ஒருவர் மயங்கி விழுந்ததை கூறிய நிலையில், உடனடியாக அந்த பயணியின் இருக்கை அருகே அமர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனையடுத்து அந்த பயணி சிறுது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதன் பின்னரும் கூட அந்த பயணியின் அருகிலேயே பயணம் செய்த தமிழிசை சௌந்தரராஜன், ஐதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திடீரென விமானத்தில் மயக்கம் அடைந்த பயணிக்கு முதலுதவி அளித்த தமிழிசை சௌந்தரராஜனை சக பயணிகள் பலரும் பாராட்டினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் இண்டிகோ விமான நிறுவனமும் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.