ஹிட்லரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சாவர்க்கர் தான் இந்தியாவில் இந்துத்துவாவை தொடங்கினார்.. சித்தராமையா பேச்சு

 
அப்படியே ‘ஆபரேஷன் லோட்டஸ்’ குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு போடுங்க.. எடியூரப்பாவை நக்கல் செய்த சித்தராமையா…..

ஹிட்லரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சாவர்க்கர் தான் இந்தியாவில் இந்துத்துவாவை தொடங்கினார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்துக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளபோதிலும், அங்கு இப்போதே தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு கடும்  போட்டியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிட்லர்

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா நேற்று, வி.டி.சாவர்க்கரையும், இந்து வலதுசாரி அமைப்பையும் கடுமையாக தாக்கினார். இது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையா நேற்று  செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கர்நாடகாவின் தட்சிண மாவட்டம் இந்துத்துவாவின் ஆய்வமாக மாற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக இந்த மாவட்டம் மத பதற்றம் மற்றும் அரசியல் வன்முறைகளை சந்தித்துள்ளது. இது இந்துத்துவத்தின் ஆய்வுக்கூடம். பொய் சொல்வது இவர்களின் சிறப்பு. 

சாவர்க்கர் படம்

சாவர்க்கர் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டார். இந்துத்துவாவை ஆரம்பித்தது யார் தெரியுமா? இந்து மகாசபாவை சேர்ந்த சாவர்க்கர்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவையில் சபாநாயகர் நாற்காலிக்கு நேர் பின்னால் மகாத்மாக காந்தி மற்றும் சாவர்க்கர் உள்பட 6 தலைவர்களின் படம் மாட்டப்பட்டது. மகாத்மா காந்தியுடன் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் படம் வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சட்டப்பேரவை வெளியே சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.