நான் உங்களை மதிக்கிறேன், ஆனால் பஞ்சாபை டெல்லியில் இருந்து நடத்தக் கூடாது... ஆம் ஆத்மி முதல்வரை மீண்டும் சீண்டிய ராகுல்

 
ராகுல் காந்தி

நான் உங்களை மதிக்கிறேன் ஆனால் பஞ்சாபை டெல்லியில் இருந்து நடத்தக் கூடாது என்று அம்மாில முதல்வர் பகவந்த் மானை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் சீண்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் ராகுல் காந்தி பேசுகையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் யாருடைய ரிமோட் கண்ட்ரோலாக மாறக்கூடாது என்றும் மாநிலத்தை சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடுமையான எதிர்வினையாற்றினார். இந்நிலையில், தற்போது மீண்டும் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபில் இந்திய ஒற்றுமை நடைபபயணத்தின் கடைசி நாளான நேற்று பதான்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: 

பகவந்த் மான்

மாநில முதல்வர் பகவந்த் மானை நான் மதிக்கிறேன். ஆனால் பஞ்சாப்பை டெல்லியில் இருந்த இயக்காமல், பஞ்சாபிலிருந்து மட்டுமே இயக்க (ஆட்சி செய்ய) வேண்டும். நான் பகவந்த் மான் ஜியிடம் சொன்னேன், ரிமோட் கண்ட்ரோலில் இருந்து பஞ்சாப்பை இயக்க விடாதீர்கள். நான் அதை சாதாரண விஷயமாக சொல்லவில்லை. மக்களவையில் நீங்கள் என்னுடன் (பகவந்த் மான் எம்.பி.யாக இருந்தபோது) அமர்ந்திருந்தீர்கள். உங்களுக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும்  பெரிய வித்தியாசம் உள்ளது. நான் உங்களை மதிக்கிறேன், இதை நான் காங்கிரஸ் கட்சியின் மேடையில் இருந்து சொல்கிறேன். ஆனால் பஞ்சாபை டெல்லியில் இருந்து நடத்தக் கூடாது. 

ராகவ் சதா

நடைப்பயணத்தின் போது, பஞ்சாபில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி ஆட்சியை பற்றி ஒரு விவசாயிடம் கேட்டேன். அதற்கு அந்த விவசாயி, இது (ஆம் ஆத்மி அரசாங்கம்) ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கம் என்று தெரிவித்தார். எனக்கு அது (ரிமோட் கண்ட்ரோல் அரசாங்கம்) பிடிக்கவில்லை. ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் போராடும் என்பது வேறு விஷயம். ரிமோட்ட கண்ட்ரோலின் அர்த்தத்தை நான் விவசாயிடம் கேட்டபோது, அவர்  ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா (ராகவ் சதாவின் உத்தரவின் பேரில் பகவந்த் மான் செயல்படுகிறார்) என்று கூறினார். அப்படியானால் அது சரியான விஷயம் அல்ல. கடந்த ஆண்டு பஞ்சாபில் இருந்து பொதுமக்களின் பணம் குஜராத் தேர்தலின் போது விளம்பரங்களுக்கு ஆம் ஆத்மி பயன்படுத்தியது. இது தவறு. இது பஞ்சாப் மக்களின் பணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.