சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம்

 
covid

சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட இத்தகைய வைரஸால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபனு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங் காங், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.