குஜராத் பாலத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு; ரூ.12 லட்சம் மட்டுமே செலவு செய்தது

 
Cable bridge collapses in Gujarat,

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர்.

மோர்பி பாலம் இடிந்து விழுந்தது

இந்த தொங்கு பாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, கடந்த வாரம்தான் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்குள் விபத்து நேரிட்டுள்ளது.  இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே நிற்க முடியும். ஆனால், விபத்து நேரிட்டபோது 500-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.  அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு, பாலம் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், அளவுக்கு அதிகமான  பார்வையாளர்களை பாலத்தில் அனுமதித்துள்ளனர். இதனால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்து விழுந்துள்ளது.

இந்த விபத்துக்குக் காரணம், பாலத்தைப் பராமரித்து வரும் தனியார் நிறுவத்தின் அலட்சியம்தான் காரணம் என்று மோர்பி மாநகராட்சி குற்றம் சாட்டிய நிலையில், இது தொடர்பாக டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாலத்தின் பராமரிப்பு நிறுவன உரிமையாளர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. 

இந்நிலையில் 143 ஆண்டு பழமையான இந்த பாலத்தை பராமரிக்க ஓரிவா குழும நிறுவனத்திற்கு 15 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மார்ச் 2022 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2037 வரை செல்லுபடியாகும். கடந்த ஆறு மாதங்களாக இந்த பாலத்தை சீரமைப்பதாக கூறி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்து வந்த இந்த நிறுவனம் பாலத்தை முறையாக சீரமைக்கவில்லை என்பதும், இந்த பாலத்தை பராமரிக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் ரூ. 12 லட்சம் மட்டுமே செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.