கடின உழைப்புக்கு நல்ல கவுரவ ஊதியம் கேட்பது குற்றமல்ல.. அங்கன்வாடி பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துங்க.. பிரியங்கா

 
பிரியங்கா காந்தி

கடின உழைப்புக்கு நல்ல கவரவ ஊதியம் கேட்பது குற்றமல்ல ஆகையால் பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துங்க என்று  முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசை பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் அண்மையில் கவுரவ ஊதியத்தை உயர்த்த மற்றும் மரியாதைக்குரிய வேலை நேரத்தை கோரி அங்கன்வாடி பணியாளர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, 39 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 884 அங்கன்வாடி பணியாளர்களை மார்ச் 14ம்  தேதியன்று பணிநீக்கம் செய்தது.

அங்கன்வாடி ஊழியர்கள்

டெல்லி அரசின் இந்த நடவடிக்கையால் 884 அங்கன்வாடி பணியாளர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. இந்நிலையில், தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி குரல் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இது தொடர்பாக கூறுகையில், ஆம் ஆத்மி அரசு கடந்த சில தினங்களுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தியது.

ஆம் ஆத்மி

ஆனால், அநீதியான நடவடிக்கையை மேற்கொண்டு, கவுரவ ஊதியம் கோரிய 800க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணிநீக்கம் செய்தது. கடின உழைப்புக்கு நல்ல கவுரவ ஊதியம் கேட்பது குற்றமல்ல.  பணிநீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்த மாத தொடக்கத்தில் டெல்லி சட்டப்பேரவையில், எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை 66 சதவீதம் உயர்த்துவது தொடர்பாக ஆம் ஆத்மி அரசால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.