ராணி எலிசபெத் மறைவு - செங்கோட்டையில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி

 
Red fort

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதன்படி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், பிரான்ஸ் மன்னருக்கு அடுத்து ஒரு அரசை அதிக காலம் (70 ஆண்டுகள்) ஆட்சி செய்தவர் என்ற பெருமையுடன் விடைபெற்றார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.  இதனிடையே ராணி எலிசபெத்தின் மறைவிற்கு இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.   ஞாயிற்றுக் கிழமை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.