பா.ஜ.க.வுக்கு வாங்க அல்லது உங்கள் சொத்துக்கள் முதல்வர் சவுகானின் புல்டோசரால் இடிக்கப்படும்.. காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்த அமைச்சர்

 
மகேந்திர சிங் சிசோடியா

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது உங்களது சொத்துக்கள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் புல்டோசரால் இடிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வீடுகளின் பகுதிகளை அரசாங்கம் புல்டோசர் மூலம் இடித்து வருகிறது. அதேபோல் மத்திய பிரதேசத்திலும், மாமா என்று அம்மாநில மக்களால் அழைக்கப்படும் முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. குற்றம் மற்றும் குற்றவாளிகள் மீதான சிவ்ராஜ் சிங் சவுகான் அரசின் பூஜ்ய சகிப்புத்தன்மையின் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி பெரிதாக இருக்கும்… முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது உங்களது சொத்துக்கள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் புல்டோசரால் இடிக்கப்படும் என்று உள்ளாட்சி தேர்தல்பிரச்சார கூட்டம் ஒன்றில் அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பா.ஜ.க. அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, பா.ஜ.க.வில் சேருங்கள், இந்த பக்கம் (ஆளும் பா.ஜ.க.) வாருங்கள். 2023ல் (எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்) மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். மாமாவின் (சிவ்ராஜ் சிங் சவுகான்) புல்டோசர் தயாராக உள்ளது என பேசியுள்ளார்.

காங்கிரஸ்

பா.ஜ.க. அமைச்சரின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மத்திய பிரதேசம் குணா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிசங்கர் விஜயவர்கியா கூறுகையில், சிசோடியாவின் கருத்து ஆளும் பா.ஜ.க.வின் இமேஜை கறைப்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச அமைச்சர் தனது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஜனவரி 20ம் தேதி (இன்று ரகோகர் நகர் உள்ளாட்சி தேர்தல்) அவருக்கு ரகோகர் மக்கள் தகுந்த  பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.