59 வயதில் விவகாரத்து... 69 வயதில் மீண்டும் இணைந்த ஜோடி

 
Marriage

59 வயதில் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நபர், 69 வயதில் லோக் அதாலத் வாயிலாக தன் மனைவியை நீதிமன்ற வளாகத்தில் கரம் பிடித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


கர்நாடக மாநிலம் தும்கூரு நகரில் உள்ள துமகூரு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல வருடங்களாக நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டபோது 69 வயது நபர் 10 வருடங்களாக நடைபெற்று வந்த தனது விவாகரத்து வழக்கை முடித்துக் கொண்டு மீண்டும் தனது மனைவியின் கரத்தை கைப்பற்றியுள்ளார். 10 வருடங்களுக்கு முன்பு சிறு காரணத்தினால் மனைவியிடம் சண்டை இட்டு பிரிந்த அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். 

அவரது மகள் வழி பேரன் பேத்திக்கு 15 வயதாகிறது. அவர்கள் தங்களது தாத்தா பாட்டியை சமாதானம் செய்த நிலையில் இன்று லோக் அதாலத்தில் தனது வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்து நீதிபதி கீதா முன்பு தனது மனைவிக்கு மாலையிட்டு இனிப்பு வழங்கி மீண்டும் அவரது கரத்தை பற்றியுள்ளார். இதே போல மொத்தமாக ஐந்து தம்பதியினர் இன்று தங்களது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் இணைந்துள்ளனர். இன்று இணைந்த அனைத்து ஜோடிகளும் நீதி அரசர் கீதா அவர்களுடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.