காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையை பசுவின் சிறுநீரை கொண்டு சுத்தம் செய்து விநாயகரை வைத்து வழிபடுவோம்.. டி.கே. சிவகுமார்

 
பசுவின் சிறுநீர்

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையை பசுவின் சிறுநீரை (கோமியம்) கொண்டு சுத்தம் செய்து விநாயப் பெருமானை வைத்து வழிபடுவோம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டி.கே.சிவக்குமார் கூறியதாவது: மாநிலத்தில் தற்போதுள்ள பா.ஜ.க. அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க இன்னும் 40 முதல் 45 நாட்கள் மட்டுமே உள்ளன. இன்னு என்ன தேதி? 24ம் தேதி? இன்னும் 40 முதல் 45 நாட்களில் எங்களின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும். இப்போதே தயாராகுங்கள், உங்கள் கூடாரங்களை எல்லாம் கட்டிக் கொள்ளுங்கள்.

டி.கே.சிவகுமார்

பா.ஜ.க. கட்சி மாநில செயலகத்தை மாசுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் டெட்டால் மூலம் விதான் சவுதா (மாநில சட்டப்பேரவை) சுத்தம் செய்யப்படும். நான் பசுவின் சிறுநீரும் கேட்டுள்ளேன். அதை கொண்டு சுத்தம் செய்து விநாயப் பெருமானை வைத்து வழிபடுவோம். தற்போதைய பா.ஜ.க. அரசு மக்களால் துரத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்துக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளபோதிலும், காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு கடும்  போட்டியை ஏற்படுத்தியுள்ளது.