குலாம் நபி ஆசாத்தின் டிஎன்ஏ மாற்றியமைக்கப்பட்டுள்ளது - காங்கிரஸ் கடும் விமர்சனம்

 
jairam ramesh

குலாம் நபி ஆசாத்தின் டிஎன்ஏ மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். காங்கிரஸ் தலைமை மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக உள்ளார் எனவும், காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது அவரது உதவியாளர்களால் தான் எடுக்கப்படுகிறது எனவும் விமர்சித்தார். 


இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைமையால் மிகப் பெரிய மரியாதையுடன் நடத்தப்பட்ட ஒரு நபர், தனது மோசமான தனிப்பட்ட தாக்குதல்களால் உண்மையான குணத்தை வெளிப்படுத்தி கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்.  குலாம் நபி ஆசாத்தின் டிஎன்ஏ மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.