இப்போது நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும்... பீகார் பா.ஜ.க. அமைச்சர்

 
மோடி

இப்போது நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்றால் அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும் என்று பிரதமரை பீகார் பா.ஜ.க. அமைச்சர் புகழ்ந்து பேசியுள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில வருவாய் துறை அமைச்சராக இருப்பவர் ராம் சூரத் ராய். முசாபர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராம் சூரத் ராய் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராம் சூரத் ராய் பேசுகையில் கூறியதாவது: நீங்கள் உயிருடன் இருந்தால், அந்த பெருமை நரேந்திர மோடிக்கே சேரும்.

ராம் சூரத் ராய்

கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசியை உருவாக்கி அதனை இலவசமாக நாட்டிலுள்ள மக்களுக்கு வழங்கினார். பல நாடுகள் இன்னும் தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்தை எதிர்த்து போராடுகின்றன. ஆனால் இந்தியாவில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானியர்களுடன் பேசுங்கள்-அங்குள்ள நிலைமையை தொலைக்காட்சி அறிக்கைகள் மூலம் பார்த்தோம். இந்தியர்களாகிய நாம் இன்னும் நிம்மதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண் (கோப்புப்படம்)

18 மாதங்களுக்கு முன் நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஜூலை 17ம் தேதியன்று 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் மைல்கல்லை கடந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 15ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை டோஸ்களை (தடுப்பூசி) வழங்க கோவிட் தடுப்பூசி அம்ரித் மஹோதசவா என்ற சிறப்பு இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.