உடலை விற்கும் பெண்களை போல நடந்து கொண்டனர்... பா.ஜ.க.வுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தாக்கிய ஹரி பிரசாத்

 
பி.கே. ஹரிபிரசாத்

2019ல் தற்போது அமைச்சராக இருக்கும் ஆனந்த் சிங் உள்ளிட்ட பா.ஜ.க.வில்  இணைந்த தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை  உடலை விற்கும் பெண்களை போல  நடந்து கொண்டனர் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்.

2019ல் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். கட்சி மாறி பா.ஜ.க.வில் இணைந்த 17 எம்.எல்.ஏ.க்களில்  காங்கிரஸின் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கும் ஒருவர். 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால், காங்கிரஸ்-மதச்சார்ப்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது, பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.  பா.ஜ.க. அரசாங்கத்தில் ஆனந்த் சிங் அமைச்சரானார்.

ஆனந்த் சிங்


காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த தற்போது கர்நாடக அமைச்சராக இருக்கும் ஆனந்த் சிங் உள்ளிட்ட  கட்சி எம்.எல்.ஏ.க்களை  கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவர் பி.கே. ஹரிபிரசாத் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். ஹோசப்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பி.கே.ஹரிபிரசாத் பேசுகையில் கூறியதாவது: விஜயநகர (ஹோஸ்பேட்) தொகுதியின் பிரதிநிதியாக காங்கிரஸ் டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். முன்பு முழுப் பெரும்பான்மையுடன் எந்தக் கட்சிக்கும் பொதுமக்கள் வாக்களிக்காத போது, நாம் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைத்தோம். ஆனால் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உடலை விற்கும் பெண்களை போல நடந்து கொண்டனர். 

பா.ஜ.க.

நாம் அவர்களை விபச்சாரிகள் என்று அழைக்கிறோம்.தங்களை விற்றுக் கொண்ட இந்த எம்.எல்.ஏ.க்களை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்?. சுயமரியாதை உள்பட அனைத்தையும் விற்ற லோக்கல் எம்.எல்.ஏ.வுக்கு (ஆனந்த் சிங்) நீங்கள் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹரி பிரசாத்தின் கருத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எஸ்.பிரகாஷ் கூறியதாவது: பி.கே.பிரசாத் துஷ்பிரயோகம் மற்றும் தவறான வார்த்தைகளை திரும்ப திரும்ப பயன்படுத்துவதில் பெயர் பெற்றவர். அவருக்கு நாக்கின் மீது கட்டுப்பாடு இல்லை. அவர் ஒரு முதிர்ந்த தலைவராக வளர்ந்ததில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்து வரும் தற்போதைய கலாச்சாரத்தை அவர் பயன்படுத்தும் மொழி பேசுகிறது. ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து போராடும் செயல்திட்டமோ பிரச்சினையோ அவர்களிடம் இல்லாததால், இது போன்ற கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை அவர்கள் கையாள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.