டெல்லி சட்டப்பேரவைக்குள் கையில் ஆக்சிஜன் சிலிண்டர், முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்..

 
கையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்

அதிகரித்து வரும் காற்று மாசுவை தடுக்க ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்காததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டப்பேரவைக்கு கையில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏந்தியவாறு மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தனர் இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுவை தடுக்க ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை எடுக்காததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டப்பேரவைக்கு கையில் ஆக்சிஜன் சிலிண்டரை ஏந்தியவாறு மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தனர்.

ஆம் ஆத்மி

இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா பேசுகையில், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. கேஸ் சிலிண்டரை இழுத்துக் கொண்டு, வாயு அறையில் வாழ தள்ளப்பட்டுள்ள டெல்லியின் 2 கோடி மக்களின் குரலை டெல்லி சட்டப்பேரவையில் எழுப்புவேன். டெல்லியை மாசு இல்லாததாக மாற்ற ஆம் ஆத்மி அரசு என்ன செய்திருக்கிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

டெல்லி காற்று மாசு

அதேசமயம் சட்டப்பேரவையின் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், சிலிண்டர்களை எடுத்துச் செல்லுமாறு பா.ஜ.க. உறுப்பினர்களிடம் கூறினார்.  மேலும், பாதுகாப்பு இருந்தபோதிலும் அவை எவ்வாறு அவைக்குள் கொண்டு  வரப்பட்டன என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு, கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் பணியில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா தலையிட்டதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டினர். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்களும், பா.ஜ.க. உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.