சைரஸ் மிஸ்திரி மரணம் எதிரொலி.. எல்லோரும் இந்த உறுதிமொழியை எடுங்க.. ஆனந்த் மகிந்திரா வேண்டுகோள்

 
ஆனந்த் மகிந்திரா

சீல் பெல்ட் அணியாததால்தான் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிர் இழந்தார் என்ற செய்தி குறிப்பிட்டு, காரின் பின் இருக்கையில் இருந்தாலும் எப்போதும் சீட் பெல்ட்டை அணிவோம் என்ற உறுதிமொழியை  அனைவரும் ஏற்குமாறு ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தியுள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் பயணம் மேற்கொண்ட போது நடந்த விபத்தில் அவர் உயிர் இழந்தார். அவருடன் ஜஹாங்கீா தின்ஷா என்பவரும் பலியானார். இந்த கோர விபத்தில்  கார் டிரைவர் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த சைரஸ் மிஸ்திரி

விபத்துக்குள்ளான காரில் முன்சீட்டில் இருந்த டிரைவரும், மற்றொருவரும் விபத்தில் பலியாகாத நிலையில், பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரியும் மற்றொருவரும் எப்படி பலியானார்கள் என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பின் சீட்டில் இருந்த  சைரஸ் மிஸ்திரியும், ஜஹாங்கீா தின்ஷாவும் சீல் பெல்ட் அணியாமல் இருந்ததே இதற்கு காரணம் தெரியவந்துள்ளது. இந்த செய்தியை குறிப்பிட்டு, அனைவரும் காரில் பயணம் செய்யும் போது சீல் பெல்ட் அணிவோம் என்ற உறுதிமொழியை எடுங்க என்று பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தியுள்ளார்.

காரில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்தல்

மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில்,  சாலை விபத்தில் மரணம் அடைந்த சைரஸ் மிஸ்திரி, காரில் பயணம் செய்தபோது சீட் பெல்ட் அணியவில்லை என்ற செய்தியை ஷேர் செய்து, காரின் பின் இருக்கையில் இருந்தாலும் எப்போதும் சீட் பெல்ட்டை அணிய தீர்மானித்துள்ளேன். மேலும் அந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் நம் குடும்பங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்.