ஆந்திராவில் 8 ஏக்கரில் கஞ்சா செடி- ட்ரோன் மூலம் கண்டறிந்த போலீசார்

 
s

ஆந்திராவில் ட்ரோன் கேமிரா மூலம்  அடர்ந்த வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த எட்டு ஏக்கர் கஞ்சா தோட்டம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.


ஆந்திர மாநிலத்தில் அல்லூரி சீதாராமராஜு, பார்வதி மன்யம், விஜயநகரம் ஆகிய மாவட்டத்தில் மலை கிராமத்தில் பழங்குடியினருக்கு பண ஆசை காண்பித்து அடர்ந்த வனப்பகுதியில் கஞ்சா பயிர் வைத்து நாடு முழுவதும்  கடத்தப்படுகிறது. இதனால் கஞ்சா போதைக்கு இளைஞர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை  கஞ்சா போதைக்கு விரைவில் அடிமையாகும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு உத்தரவின்படி கஞ்சா போதைக்கு எதிராக காவல்த்துறை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவி கிருஷ்ணா  தலைமையில்  கருடா என்ற தனிப்படை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருடா தனிப்படை போலீசார் கஞ்சா உற்பத்தியை அழித்து அதனை பயிரிடும் பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்று பயிருக்கு அவர்களை மாற்றுவது, கடத்தலை தடுத்து விற்பனை முடக்குவது, கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை நல்வாழ்வுப்படுத்தும் முகாம் அமைப்பது உள்ளிட்டவை செய்து வருகின்றனர். இந்நிலையில்  கஞ்சா  உற்பத்தியில்   அதிகம் கொண்ட   அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகள், மலைப்பிரதேசங்கள் ஆகியவற்றில் கஞ்சா சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வருவதை அறிந்த போலீசார் அதனை கண்டறிந்து அழித்து  கஞ்சா இல்லாத மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட போலீசார் மற்றும் கருடா தனிப்படை  குழுவினர்  ட்ரோன் கேமிரா உதவியுடன் கஞ்சா தோட்டங்களை கண்டுபிடிக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.


அவ்வாறு அல்லூரி சீதாராமராஜு மாவட்டம்   பார்த்தப்பாடு கிராமத்தில் அடர் வனப்பகுதிக்கு இடையே எட்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை ட்ரோன் கேமிரா  மூலம் மற்றும் செயற்கைகோள் உதவியுடன் கண்டுபிடித்த போலீசார்  அங்கு சென்று மொத்த கஞ்சா பயிரையும் வெட்டி அழித்து தீயிட்டு கொளுத்தினர் . இது குறித்து போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு தனிப்படை  கருடா குழுவின் டி.ஐ.ஜி. ரவி கிருஷ்ணா பேசுகையில் இன்று பார்த்தப்பாடு கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட 8 ஏக்கர் ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை அழிக்கப்பட்டுள்ளது. மேலும் மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு விழிப்புணர்வு செய்து அவர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கிராமத்தினர் கஞ்சா  பயிரிடாமல் மாற்றுப் பயிர் இடுவதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை ட்ரோன் கேமரா மூலம் 2000 ஏக்கர் சர்வே செய்யப்பட்டு அதில் 63 ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டது கண்டறிந்து  அவற்றை அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சா பயிருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யார் இது போன்று கஞ்சா பயிர் செய்தாலும், கடத்தினாலும்  அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.