கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட 3 மாணவர்கள் உயிரிழப்பு

 
3 Children Dead, 37 Hospitalised After Suspected Food Poisoning In Andhra Pradesh

ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி, சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு சமோசா, சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்கள் வழங்கப்பட்டது. இரவு பிரியாணி வழங்ப்பட்டது. இந்த உணவு கெட்டுப்போனதாக தெரிகிறது.

விடுதிகளில் இருந்த 86 மாணவிகளும் கெட்டுப்போன உணவை சாப்பிட்டுள்ளனர். அனைவருக்கும் ஞாற்றுக்கிழமை வாந்தி மற்றும் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 37 குழந்தைகள் அனகாப்பள்ளி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக அனகாப்பள்ளி கலெக்டர் விஜய கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பெற்றுவந்த 2 மாணவிகள், ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி கூறுகையில், “சட்டவிரோதமாக செயல்பட்ட விடுதியை கைப்பற்றி விடுதி நடத்தி வரும் கிருஷ்ணாவை கைது செய்துள்ளோம். அறக்கட்டளை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிய வேண்டும்” என்றார். இதனிடையே மாணவ, மாணவிகளின் மரணம் அதிர்ச்சியளிப்பதாக கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.