மகாராஷ்டிராவில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 20 பேர் உயிரிழப்பு

 
vinayagar

மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வின்போது 20 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை பல்வேறு நகரங்களில் 9 நாட்கள் வைத்து வழிபட்டதற்கு  பிறகு அதனை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.  

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின் போது 20 பேர் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்தா மாவட்டத்தில் உள்ள சவாங்கியில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.  மற்றொருவர் தியோலியில் மூழ்கி இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர யவத்மால் மாவட்டத்தில் சிலை கரைப்புக்கு சென்ற இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். 

மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சுபா மற்றும் பெல்வாண்டி ஆகிய இடங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி இரண்டு பேர் இறந்தனர். மேலும் இரண்டு பேர் மாநிலத்தின் ஜல்கான் மாவட்டத்தில் இறந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புனே, துலே, சதாரா மற்றும் சோலாப்பூர் நகரங்களில் தலா ஒருவர் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக உயிரிழந்த 20 பேரில் 14 பேர் நீரில் மூழ்கியும் நான்கு பேர் சாலை விபத்திலும், ஒருவர் மரம் முறிந்து விழுந்ததிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.