ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டம்! அரசு அதிரடி

 
telanana

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

தெலுங்கானா மாநில அரசு ஏரி, குளங்கள், மற்றும் நீர் பாசன கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களை கண்டறிந்து அதனை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது. ( ஐதராபாத் டிஸ்சார்டர் ரெஸ்பான்ஸ் அசட்ஸ் ப்ரொடெக்ஷன் ஏஜென்சி ) ஐதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்துகள் பாதுகாப்பு நிறுவனம் அமைத்துள்ளது. இதன் மூலம் விதிமீறி கட்டிய கட்டுமானங்கள் இடிக்கப்படுகின்றன. ஜேசிபி மற்றும் புல்டோசர்கள் களத்தில் இறக்கப்பட்டு இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு ராஜேந்திரநகர், மியாப்பூர், குத்புல்லாபூர், ஜூப்ளி ஹில்ஸ் போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி  நடந்து வருகிறது.  இதில் ஐதராபாத் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பல குளங்கள் 60 சதவீதம் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை மீட்க ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குட்புல்லாபூரில் ஏற்கனவே சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஐதரபாத் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 பெரிய ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது இடிக்கப்படுகின்றன. அரசியல் அழுத்தங்களை பொருட்படுத்தாமல், ஆக்கிரமிப்புகள் காணப்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவ்வாறு குத்புல்லாபூர்  பச்சுபள்ளி எர்ரகுண்டா ஏரி நிலத்தில்  ஆக்கிரமித்து கட்டப்பட்ட  இரண்டு பிரமாண்டமான அடுக்குமாடி  கட்டடங்கள் இடிக்கப்பட்டது.