நவ.30ம் தேதி முதல் தடுப்பூசி போடாதவங்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்.. டாக்டர்கள் அறிவிப்பு

 
தடுப்பூசி செலுத்துதல்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 2 டாக்டர்கள் வரும் 30ம் தேதி முதல், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள் டாக்டர் அஜய் சாக்லானி மற்றும் டாக்டர் பிங்கி பாட்டியா. டாக்டர் அஜய் சாக்லானி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர், தற்போது தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். டாக்டர் பிங்கி பாட்டியா இந்தூரில் பிசியோதெரபிக் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். கோவிட்-19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், இவர்கள் இருவரும் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

டாக்டர் அஜய் சாக்லானி மற்றும் டாக்டர் பிங்கி பாட்டியா

 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்க மாட்டோம் என்ற தங்களது முடிவை கடிதம் வாயிலாக  மாவட்ட கலெக்டர் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்துக்கு டாக்டர் அஜய் சாக்லானி மற்றும் டாக்டர் பிங்கி பாட்டியா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டாக்டர் அஜய் சாக்லானி கூறுகையில், தடுப்பூசியை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்

இதனால் மக்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். இந்தூர் கொரோனா இல்லாத நகரமாக மாறும் என்று தெரிவித்தார். டாக்டர் பிங்கி பாட்டியா கூறுகையில், எங்களிடம் 20-25 பணியாளர்கள் உள்ளனர். தினமும் 50 பேர் பிசியோதெரபிக்காக வருகின்றனர். எங்கள் பணியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் உடல் ரீதியாக  தொடர்பு கொள்ள வேண்டும். அரசாங்கம் கோவிட் தடுப்பூசியை வழங்குகிறது. எனவே விழிப்புணர்வுக்காக  இந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். சிகிச்சையை நிறுத்தினால் மக்கள் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.