லாரி மீது சொகுசு பேருந்து மோதி கோர விபத்து - 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

 
accident

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து சீரடி நோக்கி ஆன்மீக சுற்றுலாவிற்காக சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த சொகுசு பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.  நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சொகுசு பேருந்து பெரும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் காயம் அடைந்த நிலையில், அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாநில போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.