விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

லண்டன்: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் மல்லையாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது

முன்னதாக, வங்கிகளில் நான் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்து திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தொடர்ந்து எனக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன என குற்றம் சாட்டியுள்ள மல்லையா, விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், கிங்பிஷர் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கியில் கடனாக வாங்கிய பணம் நஷ்டமானது. நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன் அதனை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.