மது, இறைச்சிக்கு அயோத்தியில் தடை: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அதிரடி

 

மது, இறைச்சிக்கு அயோத்தியில் தடை: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அதிரடி

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்

பைசாபாத்: உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரபிரதேச மாவட்டங்களில் பைசாபாத்தும் ஒன்று. இந்த மாவட்டத்தில் தான் ராமபிரான் அவதரித்ததாக கூறப்படும் அயோத்தி நகரம் உள்ளது. எனவே இந்த நகரத்தின் பெயரையே, அந்த மாவட்டத்துக்கும் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது அந்த மாவட்டத்தில் மது மற்றும் இறைச்சிக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆத்தியநாத் தலைமையிலான அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில அரசின் இந்த முடிவுக்கு இறைச்சி கடைக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசின் முடிவால் இறைச்சி விற்பனையை நம்பி உள்ளவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசின் இந்த முடிவு நியாயமற்றது என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.