மத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது

 

மத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது.

பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், கடந்த சில வாரங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துறைவாரியாக சில ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த வாரம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, அமெரிக்கா-சீனா இடையிலான வர்ததக போர் பதற்றம் சற்று தணிந்தது. மேலும் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், டெக் மகிந்திரா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, கோடக் மகிந்திரா வங்கி உள்பட 23 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இருப்பினும், யெஸ்பேங்க், சன்பார்மா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,589 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. 915 நிறுவன பங்குகளின் விலை குறைந்தன. அதேவேளையில், 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.26 லட்சம் கோடியாக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.35 புள்ளிகள் உயர்ந்து 36,981.77 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 98.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,946.20 புள்ளிகளில் முடிவுற்றது.