கிடுகிடுவென ஏறும் வெங்காயம் விலை! வர்த்தகர்களுக்கு செக் வைக்க மத்திய அரசு தீவிர யோசனை

 

கிடுகிடுவென ஏறும் வெங்காயம் விலை! வர்த்தகர்களுக்கு செக் வைக்க மத்திய அரசு தீவிர யோசனை

வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தால், வெங்காய வர்ததகர்களின் கையிருப்புக்கு உச்சவரம்பு விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்யும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளைச்சலாகும் மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பிறகு வெங்காய சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. வெங்காய விலை உயர்வை தடுக்கவும், சப்ளையை அதிகரிக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ராம் விலாஸ் பஸ்வான்

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இது தொடர்பாக கூறியதாவது: சப்ளையை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் இதுவரை சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இருப்பினும் விலை நிலவரம் தொடர்ந்து உயர்ந்தால் கையிருப்பு உச்சவரம்பு உள்ளிட்ட இதர வழிமுறைகளை எடுப்பது குறித்து ஆய்வு செய்வோம்.

மத்திய அரசின் கையிருப்பு ஒருவேளை காலியாகி விட்டால், வெங்காய வர்த்தகர்களுக்கு கையிருப்பு உச்சவரம்பு விதிப்பது தொடர்பாக யோசனை செய்வோம். பதுக்கல்காரர்கள் மற்றும் கள்ள சந்தைக்காரர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே நடுநிலையான பணியை அரசு மேற்கொள்ளும். 

வெங்காய சந்தை

மத்திய அரசு 50 ஆயிரம் டன் வெங்காய கையிருப்பு ஏற்படுத்தி வைத்திருந்தது. தற்போது அதில் 15 ஆயிரம் டன் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.