இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

 

இந்த வாரம் பங்கு வர்த்தகம் எப்படி இருக்கும்?…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

ரிசர்வ் வங்கியின் அன்னிய செலாவணி கையிருப்பு, அராம்கோ புதிய பங்குவெளியீடு போன்றவை இந்த வார பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்து விட்டன. இதனால் இனிவரும் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளால் பங்கு வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அராம்கோ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இந்த வாரம் தொடங்குகிறது. 

சவுதி அராம்கோ

அமெரிக்க பெடரல் வங்கி வரும் 20ம் தேதியன்று கடந்த நிதிக்கொள்கை கூட்டம் குறித்த முக்கிய செய்திகளை வெளியிடுகிறது. இதனை அனைத்து வர்த்தகர்களும் எதிர்நோக்கி உள்ளனர். இதுதவிர இந்த வாரம் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் தங்களது தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை பி.எம்.ஐ. வெளிவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாதத்தின் முதல் 15 தினங்களில் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரத்தை வரும் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, சர்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தினை முடிவு செய்யும் காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.