இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டகோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அனுமதி வழங்கியது. அதன் படி, கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. அந்த தடுப்பூசிகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்களப்பிணியாளர்களே தயக்கம் காட்டுகின்றனர். இதனால், முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 163 பேர் உயிரிழந்ததாகவும் 18,002 பேர் குணமடைந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1,06,25,428 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை 1,02,83,708 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. நாடு முழுவதிலும் இதுவரை 10,43,534 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.