• October
    15
    Tuesday

Main Area

Main



ராகுல் பிரதமர் வேட்பாளரா...என்ன சொல்கிறார் குஷ்பு?

kushboo
kushboo

கோவை: காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, கேரள முதல்வர் பினராயி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், தேசிய கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிவதாக குறிப்பிட்டார். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக என்றும் பேசினார்.

ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருக்கும் போது, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்துள்ளது ஏற்க முடியாதது என எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற இந்திய கலாசார நட்புறவு கழகத்தின் 22-வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, பள்ளி, கல்லூரிகளில் சாதி, மதம் பார்க்காமல் பழகிய காலம் நன்றாக இருந்தது.  ஆனால் இன்று மதத்தின் பேரில் நடக்கும் பிரிவினை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்றார்.

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என நாங்கள் சொல்லவில்லை. நேரம் வரும்போது யார் பிரதமர் வேட்பாளர் என முடிவு செய்வோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு நன்றி என்றும் குஷ்பு தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.