• November
    21
    Thursday

Main Area

Mainசிறப்பு பெற்ற தலங்கள் வரிசை:4 நோய்கள் தீர்க்கும் திருக்கழிப்பாலை கோவில் 

சிவபுரி
சிவபுரி

சிதம்பரம்: இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பால் அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது  நம்பிக்கை.

நாம் பார்த்த பாடல்பெற்ற தலங்கள் வரிசையில் மூன்றாவது தலமான சிவபுரியிலேயே தான். இந்தத் திருக்கழிப்பாலையும் அமைந்திருக்கிறது. மூவர் பாடிய கோவில் தான் இத்தலத்து இறைவன் பால்வண்ண நாதரும் ,இறைவி வேதநாயகியும் தேவாரம் பாடிய ஞான சம்பந்தரால் வழிபடப்பட்ட இடம் இதுவல்ல.இந்த ஆலயம் கொள்ளிடம்  ஆற்றின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் அமைந்திருந்தது.

அந்த ஆலயத்தைக் கொள்ளிடம் ஆற்றின் பெரு வெள்ளம் (1962 ஆக இருக்கலாம்)முற்றிலும் அழித்து விட்டதால் இந்த இடத்தில் புதிதாக ஆலயம் எழுப்பி திருகழிப்பாலை இறைவனையும் இறைவியையும் இங்கே எழுந்தருளச் செய்திருக்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோவிலில் இருக்கும் சிவலிங்கம் மிகவும் வித்தியாசமான வடிவத்தில் இருக்கிறது. லிங்கத்தின் அடிப்பாகமான ஆவுடையார் வழக்கம்போல கரிய நிறத்தில் இருக்க லிங்கம் பெயருக்கேற்ப பால்  வண்ணத்தில் வெண்மையாகக் காட்சி தருகிறது.அது மட்டுமல்ல,லிங்கத்தின் மேல்பகுதி வழகமான அரைக் கோள வடிவில் இல்லாமல் ஒரு பெரிய குவளையைப் போல காட்சி தருகிறது.இந்த லிங்கத்துக்கு பாலபிஷேகம் செய்யும் போது ஆவுடையார் வழியே வழிந்து வரும் பாலை அருந்தினால் நோய்கள் குணமாகும் என்பது  நம்பிக்கை.

Tirukkazhippalai Palvannanathar Temple

லிங்கத்தின் இந்த மாறுபட்ட வடிவத்திற்கு காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது.சடகல் ராஜா என்கிற அரசன்,முழுவதும் வில்வ மரங்கள் நிறைந்த காடாக இருந்த இந்தப் பகுதியில் குதிரையில் வந்தானாம்.அப்போது, மண்ணில் புதைந்திருந்த இந்த லிங்கத்தின் மேல் குதிரையின் கால் பட்டு லிங்கம் இப்படி ஆகிவிட்டதாம்.அதைப் பார்த்த அரசன் உடனடியாக அந்த லிங்கத்தை தோண்டி எடுத்து இந்தக் கோவிலை கட்டிவைதானாம்.

அப்படி அரசனின் குதிரை குழம்படி பட்டு பள்ளமான இடத்தில் தேங்கும் பால்தான் இன்று பக்தர்களின் நோய்தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது.இந்த இடத்தில் வந்து தங்கி இறைவனைப் பூசித்த கபில முனிவருக்கு அவன் காட்சி கொடுத்ததை கருவறையில் சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.

திருச்சுற்றில் நர்த்தன விநாயகர்,வாயிலின் இருபுறமும் துணைவியருடன் காட்சிதரும் அதிகார நந்தி,நடராஜருக்கும்,இரண்டு தோழியருடன் காட்சி தரும் சிவகாமிக்கும் தனிச்சன்னிதிகள் உள்ளன.ஈசானிய பகுதியில் நவக்கிரகங்களுக்கு அருகில் கானப்படும் காலபைரவர் இந்தப் பகுதியில் பிரபலம்.காசியில் இருக்கும் காலபைரவருக்கு இணையான சக்தியும்,கருணையும் கொண்டவர் என்கிறார்கள். 

மக்களின் இந்த நம்பிக்கையால் தேய்பிறை அஷ்டமி திதியில் இப்பகுதி மக்கள் பெரும் திரளாகக் கோவிலுக்கு வந்து கால பைரவருக்கு வடை மாலையும் செந்நிற மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைகளும் சார்த்தி தங்கள் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டுகிறார்கள்.இடிந்த கோவிலை வேறு இடத்தில் புதுப்பித்து கட்டிய போது பழைய திருக்கழிப்பாலை கோவில் கற்களையே பெரும்பாலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனால் கோவிலின் பண்டைப் பெருமைக்கும் தொன்மைக்கும் சான்றாக இரண்டு சோழர்கால கல்வெட்டுகள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.