இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் EV…எப்படி இருக்கு? – முதல் டிரைவிங் அனுபவம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஇந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் EV…எப்படி இருக்கு? – முதல் டிரைவிங் அனுபவம்

top tamil news
top tamil news

சென்னை: இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் EV-இன் முதல் டிரைவிங் அனுபவம் குறித்து இங்கு பார்க்கலாம்.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மற்றும் டாடா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் என்ற பெருமைகளை பெற்றுள்ள கார் தான் டாடா நெக்ஸான் EV. இந்தக் காரை ஓட்டிப் பார்த்த முதல் டிரைவிங் அனுபவத்தை பற்றி இனி காண்போம். பர்பாமான்ஸ், டிரைவிங் மற்றும் ஹேண்ட்லிங், ரேஞ்ச், வசதிகள் என அனைத்திலும் ஸ்கோர் பண்ணும் வகையில் இந்த டாடா நெக்ஸான் EV அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னென்ன அம்சங்கள் இந்தக் காரை இந்திய மார்கெட்டில் உச்சத்திற்கு கொண்டு போகப் போகிறது?

top tamil news

டிசைன் & ஸ்டைல்:

முன்பக்கத்திலிருந்து பார்க்கையில் இந்தக் காரின் தோற்றம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் புதுமையாக உள்ளது. இதன் காரணமாக அதிக ஸ்போர்ட்டி லுக் மற்றும் பிரீமியம் கார் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது. மெல்லிய மற்றும் கூர்மையான ஹெட்லைட்டுகள் இந்தக் காருக்கு ஒரு ஆக்ரோஷ பார்வையை அளிக்கிறது. மேலும் கருப்பு நிற பட்டையான தகட்டில் இந்த ஹெட்லைட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது. பனிப்பொழிவு இருக்கும் சமயங்களில் கைகொடுக்கும் விதமாக அதற்கென்று தனி லைட்டுகள் காரின் முன்பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளது.

top tamil news

காரின் உட்புற தோற்றம்:

டாடா நெக்ஸான் EV காரின் உட்புறத்தில் லெதர் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலேயே ஆடியோ கண்ட்ரோல் மற்றும் கால் ஆப்ஷன்களும் உள்ளன. ஸ்டியரிங் பின்பக்கமாக செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் அனலாக் ஸ்பீடோ மீட்டர். மேலும் பேட்டரி ஸ்டேட்டஸ், டெக்கோ மீட்டர், பிரேக் பற்றிய தகவல் ஆகியவை இன்ஸ்ட்ரூமன்ட் க்ளஸ்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவிங் காக்பிட் பகுதியில் ஏழு இன்ச் ப்லோட்டிங் இன்போடெயின்மன்ட் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதில் மொத்தம் 35 வகையான வசதிகள் உள்ளன. மேலும் ஏசி வென்ட், டுயல் டோன் டேஷ்போர்டு, கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங், யுஎஸ்பி போர்ட், 12v சார்ஜிங் சாக்கெட் ஆகியவை காரின் காக்பிட் பகுதியில் இடம்பிடித்துள்ளன.

top tamil news

காரின் செயல்திறன்:

இந்த டாடா நெக்ஸான் EV காரானது 9.9 நொடிகளுக்குள் நூறு கிமீ வேகத்தை எட்டக் கூடியதாகும். அதிகபட்சமாக 122 கிமீ வேகம் வரை இந்தக் காரில் எளிதாக பயணிக்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 312 கிமீ தூரம் வரை டாடா நெக்ஸான் EV பயணிக்கும் என்பது ஆச்சர்யம் தரக் கூடிய விஷயம். ஏனெனில் பெட்ரோல் அல்லது டீசல் மாடல் எஸ்யூவி கார்களிலேயே முழுமையாக எரிபொருளை நிரப்பிக் கொண்டு அதிகபட்சம் 290 கிமீ தூரம் வரை தான் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

top tamil news

ஆக்சிலரேட்டரில் கால் வைத்ததுமே உடனடியாக ஜிவ்வென்று கிளம்பக் கூடிய வகையில் இதன் பிக்கப் உள்ளது. நார்மல் மோட் மற்றும் ஸ்போர்ட் மோட் என்று இருவகையாக இந்தக் காரில் பயணிக்க முடியும். நார்மல் மோடில் பயணிக்கும்போது என்ஜின் சப்தம் துளிக் கூட நம்மால் உணர முடியாது. முன்பக்க சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்திற்கு டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் செயல்திறனும் சிறப்பாகவே இருக்கிறது.

மொத்தத்தில் கிட்டத்தட்ட ஒரு முழுமையான எலக்ட்ரிக் காராகவே டாடா நெக்ஸான் EV வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதால் பசுமை மீது நாட்டம் கொண்டவர்கள் இந்தக் காரை தாராளமாக தேர்வு செய்யலாம். தவிர, ஸ்போர்ட்டி லுக்கும் குறைவில்லாமல் இருப்பதால் கார் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே டாடா நெக்ஸான் EV வெளிவந்துள்ளது என்று சொன்னால் அதில் மிகையில்லை.

2018 TopTamilNews. All rights reserved.