• October
    15
    Tuesday

Main Area

Mainதிருமாவளவனை இழிவுபடுத்திய ஹெச்.ராஜா: சீமான் எச்சரிக்கை

seeman
seeman

சென்னை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல், கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. 

தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. 

தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். 

தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பாஜகவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லை. தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக்கட்சியாக ஒதுக்கித் தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத் தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது. 

ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கிற அண்ணன் திருமாவளவனைப் பற்றிப் பேசுவதற்கு அணுவளவும் உரிமையோ, தகுதியோ அற்றவர் எச்.ராஜா. அண்ணன் திருமாவின் அரசியல் நிலைப்பாடுகளில் எங்களுக்கு முரண்கள் இருக்கலாம்; கருத்தியலில் வேறுபடலாம். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து திருமாவளவன் எங்கள் மூத்தவர். அவர் மீதான இக்களங்கத்தையும், அருவெறுக்கத்தக்க விமர்சனத்தையும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. 

வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும். 

அண்ணன் திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.