• August
    25
    Sunday

Main Area

Mainகிராமங்கள் கொண்டாடும் கதிரவ பொங்கல்!

gramaththu pongal
gramaththu pongal
Loading...

உலகங்களின் இயக்கத்துக்குக் காரணியாகக் கதிரவன் இருக்கிறான் எனவேதான் நமது பண்பாட்டில் கதிரவ வழிபாட்டுக்கு மிக உன்னதமான இடத்தை வைத்திருக்கிறோம். பொங்கல் பண்டிகை என்பது நமது மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கைமுறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

sunrise

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். 

தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.

pongal11

தமிழர் திருநாளான பொங்கல்  அறுவடை முடிந்தவுடனேயே கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிடும். அவரவர் வயல்களில் விளைந்த நெல் மணிகளை இடித்து முறத்தால் புடைத்து பொங்கல் வைப்பதற்கு தேவையான சத்துள்ள பச்சரிசியை அவர்கள் தயார் செய்வார்கள். 

பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிடும். களிமண்ணையும், வண்டல் மண்ணையும் குழைத்து உருவாக்கப்பட்ட சுவர்களையும், தரையையும், அடுப்புகளையும் கொண்ட கூரை வீடுகளை, பெண்கள் கூட்டிச் சுத்தப்படுத்தி, சாணத்தால் மெழுகுவார்கள். 

pongal


குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து, புத்தாடை உடுத்தி பொங்கல் வைப்பதற்கு ஆயத்தமாகி விடுவார்கள். 
 
வீட்டின் முற்றத்தில் சிறிய மணல் மேடை அமைத்து, அதன் மேலே பாறாங்கல்லை அடுக்கி அடுப்புப் போன்ற அமைப்பை உண்டாக்கியிருப்பார். பாறாங்கல் அடுப்பைச் சுற்றி, மூன்று கரும்புகளை முக்கோண வடிவத்தில் நட்டு நிறுத்தியிருப்பார். இவை எல்லாமே மாக்கோலத்தின் மேல் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

pongal

மண்ணாலான பொங்கல் பானையைச் சுத்தமாகக் கழுவி அதைச் சுற்றிலும் அழகாகக் கோலமிட்டு மஞ்சள் கொத்து, கரும்பு, பனங்கிழங்கு, கண்ணுப்புள்ளப்பூ, ஆவாரம்பூ, கதம்பம் ஆகியவற்றைக் கட்டி, நல்ல நேரம் பார்த்து, அடுப்பின் மேல்பானையை வைப்பார்கள்.

எரிப்பதற்குக் காய்ந்த ஓலைகளையும், குச்சிகளையும் மட்டுமே பயன்படுத்துவார்கள் . அதன் பின்னர் பச்சரிசியை களைந்து, அக்கழனித்தண்ணீரை, குலதெய்வத்தை பிரார்த்தித்துக் கொண்டே பானையில் ஊற்றுவார்கள்.

 பால் எப்போது பொங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்துகொண்டே இருக்கும் .  பால் பொங்கும் நேரத்தில் வலம்புரிச் சங்கெடுத்து ஊதுவார்கள். அதனையடுத்து வெண்கல மணியை அடித்து மங்கல ஓசையை எழுப்புவார்கள். அதனையடுத்து பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் கூறுவார்கள்.

pongal14

அதன் பின்  பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ்பழம், ஏலம் சுக்கு, நெய் ஆகிய பொருட்களை பானையிலிட்டு, நன்றாகப் பொங்கல் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்குவார்கள்.

பொங்கலை குலசாமிக்கும், கதிரவனுக்கும் படைத்த பின்பு கூட்டாக உட்கார்ந்து அனைவரும் உண்ணத் தொடங்குவார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கிராமத்து பொங்கல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் சிறிது அளவு கூட பழமை மாறாமல் கொண்டாடப்படுவது மட்டுமே தமிழக கிராமங்களுக்கு பெருமை சேர்கின்றது.  
 

2018 TopTamilNews. All rights reserved.