• December
    13
    Friday

Main Area

Mainதவம் பெரியதா? தானம் பெரியதா?

தவம்
தவம்

இறைவனை நினைத்துக் கொண்டே இருந்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான் என்பது உண்மை தான். ஆனால் அதை விட இறைவனுக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடியது பிறருக்கு செய்யும் தானமே. 

god

பார்ப்பதற்கு சாதுவாக இருக்கும் முனிவர்கள், இவர்கள் அவ்வப்போது சினம் கொண்டு சாபம் கொடுத்து விடுவார்கள். அறியாமல் செய்த தவறாயினும் கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது அல்லவா. அவசரத்தில் சாபம் கொடுத்து விட்டு, பின் அதற்கான சாப நிவர்த்தியையும் சொல்கிற முனிவர்களும் இருந்தார்கள். அப்படித் தான் ஒரு முனிவர் எதற்கெடுத்தாலும், கொஞ்சமும் யோசிக்காமல் உடனே பிரசாதத்தை பக்தர்களுக்குத் தருவது மாதிரி, ‘இந்தா பிடி சாபத்தை’ என்று போவோர் வருவோருக்கெல்லாம் சாபம் கொடுத்து வந்தார். ஒரு முறை அவர் தவம் செய்யும் போது, வயதான பெரியவர் ஒருவர், அந்த முனிவரிடம் சென்று வழிகேட்டார். நம்ம முனிவர் சும்மாவே ஆடுவார்.. தவத்தைக் கலைத்து வழி கேட்ட வயோதிகரைப் பார்த்ததும், கால்களில் சலங்கைக் கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். ‘என் தவத்தைக் கலைத்து விட்ட நீங்கள் பறவையாய் மாறி விடுங்கள்’ என்று அந்த வயதான பெரியவரை சபித்து விட்டார்.

rishi

பறவையாய் மாறிய வயோதிகனைத் தேடி அவனது வயோதிக மனைவி தள்ளாடிய படியே வந்தாள். வரும் வழியில் யாருமே இல்லாததால், தன் கணவரைத் தேடி வந்தவள் முனிவர் தவம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், முனிவரிடம் வந்து தன் கணவரை பார்த்தீர்களா என்று கேட்டாள். இப்போது தான் அந்த முதியவர் என் தவத்தைக் கலைத்தார் என்று பறவையாக மாற்றினேன். பின்னாடியே நீயும் வந்து என்னை கேள்வி கேட்கிறாயே? நீயும் பறவையாக மாறி போ என்று மீண்டும் சாபம் கொடுத்தார். 
முனிவரே... ஒரு நிமிடம் என்றாள் அந்தக் கிழவி. உன் தவத்தால் உனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டாள். இறைவனை என்னுள் காண்பேன் என்றார் முனிவர். மற்றவர்களைத் துன்புறுத்தி உன் மனதில் அமைதியை நிரப்பி இறைவனை எப்படி காண்பாய். இதுபோல் எத்தனை பேருக்கு சாபம் கொடுத்தாயோ. இறைவனே உன்னை விரும்ப மாட்டார் . வேண்டுமானால் உனக்கு குரு இருந்தால் அவரிடம் போய் கேள் என்று சொல்லி பறவையாக மாறி விட்டாள்.

rishi

முனிவருக்கு மனதுள் இப்போது குழப்பம் ஏற்பட்டது. இதுவரை தான் கொடுத்து வந்த சாபம் எல்லாம் மனசுக்குள் ரயில் பெட்டி மாதிரி நீ...ளமாக வந்து போனது. நிறைய சாபங்களைக் கொடுத்திருக்கிறேனே என்று கலங்கினார். அவசர அவசரமாக தனது குருவைத் தேடி ஓடினார். குருவை சந்தித்து நடந்ததைக் கூறினார். ஆமாம் அவர் சொல்வது சரிதான். தவத்தின் வலிமை எல்லாம் நீ சாபம் கொடுக்க கொடுக்க கரைந்து விடும். அவசரப்பட்டு யாரையும் சபிப்பது முனிவருக்கு அழகல்ல. நீ கொடுத்த சாபத்தால் பல ஆண்டுகள் நீ செய்த தவத்தின் பலனை இழந்து விட்டாய் என்றார்.

முனிவருக்கு வருத்தமானது. அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். குரு யோசித்தார். தவத்தை விட தானம் பெரியது. இந்த ஊரில் தனஞ்சயன் என்னும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று உன் புண்ணியத்தைக் கொஞ்சம் கொடு என்று கேள். இழந்த உன் தவ வலிமை கிட்டும் என்றார். முனிவரும் ஊருக்குள் நுழைந்தார்.

வழியில் மீன் விற்கும் பெண் ஒருத்தி அறியாமல் இவரை தீண்டி விட்டாள். அபத்தமான உன் செயலால் என்னை அழுக்காக்கி விட்டாயே! நீயும் மீனாக கிட என்று சபித்தார். அக்கணமே அவளும் மீனாக மாறினாள்.இப்படியே வழி நெடுக இவருக்கு தொல்லை கொடுத்தவர்களை எல்லாம் சபித்தப் படி தனஞ்செயன் வீட்டுக்கு சென்றார். இவரை உபசரித்து வணங்கினான். அப்பனே எனக்கு உன் புண்ணியத்திலிருந்து சிறிது தானம் கொடுக்கிறாயா என்று கேட்டார். அதனால் என்ன தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தான்.

rishi

மகிழ்ச்சியாக அதைப் பெற்று மீண்டும் குருவிடம் சென்றார். எனக்கு புண்ணியம் கிடைத்து விட்டது. இதனால் அவனது புண்ணியக் கணக்கு குறைந்து விடுமா என்று கேட்டார். இல்லை மாறாக அவனது கணக்கு பன்மடங்கு அதிகரிக்கும். அவன் இறைவனைத் தேடி சென்று வணங்குவதில்லை. மாறாக அதர்ம வழியில் செல்ல மாட்டான். யார் வந்து கேட்டாலும் கையிலிருப்பதைக் கொடுத்து தானம் செய்து மகிழ்வான் என்றார்.

முனிவருக்கு புரிந்தது. எனக்கு கொடுத்த புண்ணியத்தால் நான் சாபம் கொடுத்தவர்கள் விமோசனம் பெறட்டும். இனி யாரையும் சபிக்காமல் என் தவத்தால் நான் நற்பயனை மேற்கொள்கிறேன் என்று தவம் புரிந்து நற்கதியை அடைந்தார்.

தானம் புண்ணியமிக்கது. அதனால் இயன்றவரை இல்லாதவர்களுக்கு செய்து இறைவனை மகிழ்விப்போம்

2018 TopTamilNews. All rights reserved.