• August
    24
    Saturday

Main Area

Mainஅசைவப் பிரியர்களே! மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க

food
food
Loading...

மதுரை பைபாஸ் ரோடுல சொக்கலிங்கபுரம் பிக் பஜார் பக்கத்து ரோட்ல போனீங்கன்னா அந்த ரோடு பவர் கடைல தான் போய் நிக்கும். இல்லேன்னா அரசரடி பம்பிங் ஸ்டேஷனுக்கு எதுத்தாப்ல ஒரு சின்ன மார்க்கெட் ரோடு போகும் அதுக்குள்ள போனா இடது பக்கம் ரெண்டாவது கடை.

பவர் கடை காலைல இருந்து மத்தியானம் 12 மணி வரைக்கும் ஆட்டுக் கறிக் கடை, 12 மணிக்கு மேல ரெஸ்டாரண்ட்.

powermess

வெளிய பத்து பேர் உக்காரலாம், உள்ள 20 பேர் சாப்பிடற அளவு இடம் இருக்கு. நாங்க உள்ள போய் உக்கார்ந்தோம். செர்வ் பண்றவர் முதல்ல இட்லி எடுத்திட்டு வந்து ஆளுக்கு மூணு வச்சார். இங்க மூளை ரோஸ்ட், மட்டன் சுக்கா, சுவரொட்டி நல்லா இருக்கும்னு ஆல்ரெடி நண்பர்கள் சொன்னதால அதையே சொன்னோம்.

- மூளை ரோஸ்ட் பிரியர்கள் யாராவது இருந்தீங்கன்னா, இங்க குடுக்கற டேஸ்ட்-அ வேற எங்கேயும் நீங்க சாப்பிட்ருக்க முடியாது.. அப்படி ஒரு சுவை. மூளை கூட வெங்காயம் போட்ட அந்த மசாலா கூட்டு இருக்கு பாருங்க.. சான்ஸ்-ஏ இல்லங்க! நானும் நண்பரும் மூளை ரோஸ்ட்-அ விட கூட இருக்க மசாலாக்கு தான் போட்டி போட்டோம்.

powermess

- இங்க மட்டன் சுக்கா கொஞ்சம் ட்ரை-ஆ வெங்காயம் போட்டு ஃப்ரை பண்ணி செர்வ் பண்ணாங்க.

கறி டாப் கிளாஸ்!

- சுவரொட்டி-யும் செம்ம டேஸ்ட், கூட்டு அத விட டாப்

powermess

இட்லி-க்கு மூணு வகை குழம்பு குடுத்தாங்க.. எல்லாமே சூப்பரு! 

ரொம்ப நாளைக்கு அப்புறம் இலைய வழிச்சு வழிச்சு சாப்பிட்டோம்.. நாங்க தான் அப்படி-னு பாத்தா, எல்லா டேபிள்-லயும் அப்படி தான் இருந்துச்சு. மட்டன் ஐட்டம்ஸ் கூட இருக்க கூட்டுங்க அவ்வளோ விசேஷமா இருக்குங்க.

கடைசியா ஒரு கறி தோசை வாங்கி ஷேர் பண்ணோம். அளவு பெருசா இருந்துச்சு ஒரு ஆள் திருப்தியா சாப்பிடலாம்.

powermess

பில் கொண்டு வந்தாங்க, நம்பவே முடியல, எதிர் பாத்ததை விட கம்மியா இருந்துச்சு. இவ்வளோ கம்மியா இந்த குவாலிட்டி-ல வேற எங்கயும் மட்டன் ஐட்டம்ஸ் கிடைக்குமான்னு தெரியல.

ஒரு வித திருப்தி கலந்த சந்தோஷத்தோட வெளிய வந்தோம். கடை ஓனர்-அ பாக்கணும்னு சர்வர்-ட்ட கேட்டேன், அவர் கல்லால இருக்க ஒருத்தர காட்டுவாருனு பாத்தா, அடுப்புல நிக்கறவர காட்டுனாரு. பக்கத்துல போய் பேச்சு குடுத்தேன்.

அவர் சொன்னது -


- இந்த இடத்துல கறிக் கடை இவங்க அப்பா ஆரம்பிச்சு 50 வருஷம் ஆகுதாம்

- இவர் ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சு 20 வருஷம் ஆகுதாம் 

- இவர் பேரு பகத் சிங்.. ஆனா சின்ன வயசுல இருந்தே நண்பர்கள் பவர் சிங்-னு கூப்பிட்டு அதுவே பேர் ஆயிருச்சாம். சர்டிபிகேட்-ல கூட இப்ப பவர் சிங்-னு தான் இருக்காம் 

- இவரோட அப்பா தன் மகன்களுக்கு எப்படி பேர் வச்சிருக்கார் பாருங்க- முஜிபுர் ரஹ்மான், நேத்தாஜி, பகத் சிங், ஹிட்லர். ரொம்ப முற்போக்குவாதியா இருந்திருப்பார் போல

powermess

20 வருஷத்துக்கு முன்னாடி கடை ஆரம்பிச்ச புதுசுல கோலா உருண்டையும் சூப் மட்டும் தான் குடுத்தாங்களாம். வண்டி தள்ளுறவங்க, கீழ் தட்டு குடும்பத்து குழந்தைகள் வந்து வாங்குவாங்களாம், இன்னும் கோலா உருண்டை 6 ரூபாக்கு தான் விக்கறாங்க. 

அப்புறம் மெதுவா ஒவ்வொரு ஐட்டம்-ஆ சேத்துருக்காங்க. மட்டன்-ல இவ்வளோ வகையான ஸ்பேர் பார்ட்ஸ் குடுக்கற ரெஸ்டாரண்ட் இப்ப தாங்க பாக்கறேன். மட்டன்-ல என்னென்ன ஐட்டம்-லாம் உங்களுக்கு தெரியும் ? இங்க போனீங்கன்னா இது வரைக்கும் கேள்வி படாத ரெண்டு ஐட்டம் பாப்பீங்க.

- சிலுப்பி குடல் கேள்வி பட்ருகீங்களா ? குடல்-லயே வெள்ளையா கொழுப்பு மாதிரி இருக்க ஒரு ஐட்டம். வயிறு புண்ணுக்கு இத மருந்தா சாப்பிடுவாங்களாம்.

- நல்லி கறி ரோஸ்ட் : நல்லி எலும்பு கறியோட நல்ல அளவு தர்றாங்க 

powermess

- காடி சாப்ஸ் : நிறைய இடங்கள்ள கிடைக்காத ஒரு ஐட்டம். ஒரு பிளேட்-ல மூணு பீஸ் தர்றாங்க. விலையும் கம்மி.

- மாங்காய் : ஆடோட டெஸ்டிகிள்ஸ் ஃப்ரை. இதெல்லாமா சாப்பிடுவாங்கன்னு ஒரு சிலர் நினைக்கலாம்.. ஆனா இது வேற லெவலுங்க!

பவர் சிங்-ட்ட பேசிட்டு இருக்கப்ப, சாப்டீங்களா-னு கேட்டார்.. உங்கட்ட முதல்லயே பேசாம போய் வழக்கமான ஐட்டம்களையே சாப்பிட்டுட்டோம்-னு பொலம்பிட்டு, நாளைக்கு மீண்டும் வர்றோம்னு சொல்லிட்டு கிளம்புனோம். எங்க டோட்டல் பில் 500 குள்ள தாங்க வந்துச்சு. இவ்வளோ கம்மி அமௌன்ட்-க்கு வேற எங்கயும் இப்படி சாப்பிட முடியுமான்னு சந்தேகம் தான்.

பவர் சிங்-ட்ட பேசறப்ப அவ்வளோ உற்சாகமாக பேசுனார். உணவு தயாரிக்கறதுல அவருக்கு இருக்கும் ஈடுபாடு புரிஞ்சது. அவர் சொன்ன தயாரிப்பு முறைகளையும் ஐட்டம்-களையும் சொல்ல ஒரு போஸ்ட் பத்தாதுங்க. நடுத்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்கள் தான் நிறைய இவரோட கஸ்டமர்ஸ்-ஆம். அவங்கள கருத்துல கொண்டு தான் இன்னும் நிறைய ஐட்டம்ஸ் விலை கம்மியா வச்சிருக்காராம். கோலா ஓட விலையே மெனு-ல போடல பாருங்க. 

powermess

மசாலா ஐட்டம்ஸ் எல்லாமே வீட்டு தயாரிப்பாம். ஞாயிறு கடை லீவ்.

இன்னொரு விஷயம் சொன்னாரு ரொம்ப புடிச்சிருந்துச்சு. எதுத்தாப்ல இருக்க தெரு-ல கார்-அ பார்க் பண்ணிட்டா இவங்க கார்-க்கு சப்ளை பண்ணுவாங்களாம்.

ஆனா ஒரு கண்டிஷன்!  கார்-ல பெண்கள் இருக்கணுமாம் அப்ப தான் சப்ளை பண்ணுவாங்களாம். பெண்களோட வந்தா தண்ணி அடிக்க மாட்டாங்கன்ற உங்க கான்செப்ட் நல்லா இருக்கு...  ஆனா அந்த காலம் எல்லாம் மலை ஏறி போச்சு பாஸ். மனைவிய கூட வச்சுக்கிட்டே அடிக்கிறாய்ங்க

2018 TopTamilNews. All rights reserved.