• April
    05
    Sunday

Main Area

Main



ஒரே இரவில் பாக்கி தொகையை கட்ட சொன்னால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான்.... வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் தகவல்

வோடாபோன் ஐடியா
வோடாபோன் ஐடியா

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த காலஅவகாசம் கோரி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் நிலுவை தொகையை செலுத்த வேண்டும் இல்லையென்றால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் பாக்கி தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு திடீரென உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வோடாபோன் ஐடியா நிறுவனம் தங்களால் ஏஜிஆர் நிலுவை கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியாது என்றும் திங்கட்கிழமை ரூ.2,500 கோடி கட்டுவதாகவும், வெள்ளிக்கிழமையன்று ரூ.1,000 கோடி கட்டுவதாகவும் கூறியது. மேலும் நிறுவனத்தின் மீது எந்தவித கெடுபிடி நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், வோடாபோன் தாக்கல் செய்த வங்கி உத்தரவாதத்தை பணமாக்கி கொள்ள கூடாது என்றும் அந்நிறுவனத்தின் சார்பில் வக்கீல் முகுல் ரோஹத்கி உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நீதிமன்றம் அது தொடர்பாக எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க மறுத்து விட்டது.

வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி

இந்த விவகாரம் தொடர்பாக வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த பத்தாண்டில் வோடாபோன் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரே நாள் இரவில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த சொன்னால் நிறுவனத்தை மூட வேண்டியதுதான். இதனால் 10 ஆயிரம் வேலை இழப்பர். 30 கோடி வாடிக்கையாளர்கள் சிரமப்படுவர். மேலும் மொத்த தொலைத்தொடர்பு துறையிலும் இந்த விளைவுகள் வெளிப்படும். போட்டி இருக்காது மற்றும் 2 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.