மதுரை : ஆசிரியையை பள்ளியில் புகுந்து அவரது கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகில் உள்ள சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன். இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும் இரட்டை குழந்தைகளும் உள்ளனர். ரதிதேவி மதுரை - திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருப்பினும் குரு முனீஸ்வரன் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாகச் சுற்றித் திரிந்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு ரதிதேவி கணவர் குரு முனீஸ்வரனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து கடந்த ஒருமாதத்திற்கு முன்பு ரதிதேவியின் வீட்டுக்கு சென்ற குரு முனீஸ்வரன் மனைவியை சேர்ந்து வாழலாம் என்று கூறி அழைத்துள்ளார். இதற்கு ரதிதேவி மறுப்பு கூறியதாகத் தெரிகிறது. இதனால் ரதிதேவி மீது ஆத்திரத்திலிருந்த குரு முனீஸ்வரன் நேற்று மதியம் பள்ளிக்குச் சென்ற மனைவியிடம் வீட்டு சாவி வாங்க வேண்டும் என கூறி பள்ளிக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது ஆசிரியை ரதிதேவி 3-வது மாடியில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். வகுப்பறையில் நுழைந்த குரு முனீஸ்வரன்,மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இருவரும் வாக்குவாதம் முற்றியதால் குரு முனீஸ்வரன் ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ஆசிரியை ரதிதேவி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைக்கண்டு மாணவர்கள் கத்தி கூச்சலிட அவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிய குருமுனீஸ்வரன், அங்கிருந்து தப்பியோடும் போது, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குரு முனீஸ்வரனைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.