• November
    21
    Thursday

Main Area

Mainஃப்ரிட்ஜ் பாதுகாப்பும் பராமரிப்பும் .. ஃப்ரிட்ஜில் முட்டைகளை வைக்கலாமா?

ஃப்ரிட்ஜ்
ஃப்ரிட்ஜ்

இன்று, நம் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசியமான பொருளாக குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது.அப்படி அத்தியாவசியமான பொருளாக மாறியிருக்கும் ஃப்ரிட்ஜை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா... அல்லது சமையலில் மீதமாகிப் போன சட்னி, சாம்பார்களை வைத்து சூடுபடுத்த மட்டுமே உபயோகிக்கிறோமா? 

fridge

உங்கள் வீட்டிலிருக்கும் ஃப்ரிட்ஜ் பயன்பாடுகளைப் பற்றியும்,ஆரோக்கியம், மின் சிக்கனம் மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் முறை பற்றியும் சில எளிய டிப்ஸ்கள்... ஃப்ரிட்ஜ் பராமரிப்பதில் எல்லோருக்கும் உபயோகப்படும் சிறு தகவல்களைத் தருகிறோம். நீங்கள் படித்து பயனடைந்ததைப் போலவே டாப் தமிழ் நியூஸ் வழங்கும் இந்த தகவல்களை உங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் ஆரோக்கியம் காத்து பயனடையச் செய்யுங்கள்.

ஃப்ரிட்ஜ் வாங்கும் பொழுது நிறம் தேர்ந்தெடுப்பதில் நாம் காட்டுகிற அக்கறையை, அதைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை. ஃப்ரிட்ஜை சமையலறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தொடர்ச்சியாக சமையலறையின் புகை பட்டு ஃப்ரிட்ஜின் நிறம் மங்க துவங்கி விடும். 
பொருட்களை எடுக்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறக்கக் கூடாது. சமையலுக்கு தேவையானப் பொருட்களை, ஒரு முறை திறக்கும் பொழுதே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜைத் திறந்து வைத்துக் கொண்டு, ‘இன்று என்ன சமைக்கலாம்?’ என்று யோசனையில் மூழ்கக் கூடாது. ஃப்ரிட்ஜைத் திறந்த, உடனே மூடிவிட்டால் மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்.

ஃப்ரிட்ஜின் பின்பக்கத்தில் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். ஃப்ரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணிகளைக் கொண்டு துடைக்க வேண்டும்.

வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது, கூடுமானவரை ஃப்ரிட்ஜில் உள்ளப் பொருட்களை எடுத்து, சுத்தப்படுத்தி, ஃப்ரிட்ஜைக் காய வைத்துச் செல்லுங்கள்.  மாதத்தில் ஒரு நாளாவது, சுத்தப்படுத்தி ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுத்தால், உள்ளே இருக்கிற பாக்டீரியாக்களைத் துரத்தலாம். ஃப்ரிட்ஜும் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். 

fridge


ஃப்ரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டோ, ஸ்பூன் போன்ற கூரானப் பொருட்களைக் கொண்டோ குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் ஐஸ் ட்ரேக்களை வைக்கலாம். சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மீதும் ஐஸ் ட்ரேக்களை வைக்கலாம். இப்படிச் செய்தால் ஐஸ் ட்ரேக்களை எடுக்கும் போது சுலபமாக இருக்கும்.  

ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டு விடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

fridge


அதிகப்படியான பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்து அடைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருட்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு வைத்தால் பச்சை நிறம் மாறாமல் இரண்டு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலைகளையோ, அடுப்புக்கரித்துண்டு ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

fridge


கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

பொரித்த அப்பளங்கள், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.
ஊறுகாயை ரெப்ஜிரேட்டரில் வைக்கக்கூடாது.

சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள் என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை அழ வைத்து விடாதீர்கள். அப்படிச் செய்தால், குளிர் கண்ட்ரோல் ஆவதில் குழப்பம் ஏற்படும். தேவையான அளவு பொருட்களை மட்டும் ப்ரிட்ஜில் வைக்கவும். 

தரமான ஸ்டெபிலைசர்கள் வாங்கி பொருத்தவேண்டும். ஃப்ரிட்ஜை ஒரு முறை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும். 

fridge

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள். 6 மாதத்திற்கு ஒருமுறை காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ஃப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும். 

முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, ப்ரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுகிறது. அதிலும் மிகவும் குளிர்ச்சியான இடத்தில் பராமரிக்கும் போது, அவை பாலைப்போல் திரிந்துவிடுகிறதாம்.

2018 TopTamilNews. All rights reserved.