kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


 உடம்பை பலப்படுத்தும் நாட்டு மாதுளம் பூ  துவையல்…

நாட்டு மாதுளம் பூ
நாட்டு மாதுளம் பூ
Loading...

நாம் சமையல் செய்யும் பொழுது,அதன் ருசியை மட்டுமே பெரும்பாலான நேரங்களில் கவனத்தில் கொள்கிறோமே தவிர, அதன் சக்தியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.காய்கறிகளை விதவிதமாக சமையல் செய்யும் நாம் அதன் இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால், கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் இலைகளில் அத்தனை சக்திகள் இருக்கின்றன. 

pomegranate

மாதுளை உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.அபரிமிதமாக சக்திகள் மாதுளையில் இருக்கும் என்பதெல்லாமே நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், உரித்து சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு மாதுளையை வாங்குவதில்லை. அப்படியே வாங்கினாலும், நாட்டு மாதுளையின் பக்கம் நாம் போவதில்லை.காரணம் இன்று கவர்ச்சிகரமாக, செக்கச்செவேலென்று கண்களைப் பறிக்கும் ரத்த சிவப்பு நிறத்தில் காபூல் மாதுளைகள் நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
ஒரு ஆர்வத்தில், வீட்டில் மாதுளைச் செடியை வளர்த்து வருபவர்களும் கூட நாட்டு மாதுளையின் ருசியில் அதிக நாட்டமில்லாமல், ‘எங்க வீட்ல வர்ற மாதுளம் பழம் சாப்பிடுவது மாதிரி இல்லை’ என்று பெருமை பேசிக் கொண்டிருப்போம். அந்த மாதிரி பெருமை பேசிக் கொண்டு, பழத்தை வீணடிப்பவர்கள் சமையலில் மாதுளைப் பூக்களைப் பயன்படுத்தி, அதன் சத்துக்களைப் பெறலாம்.

pomengranate flower

மாதுளைப் பழத்தை விட மாதுளம் பூவிற்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவிற்கு வாய்ப்புண்கள்,குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு. இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைந்தது.ரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன. ரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் மாதுளம் பூவைச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தி அடையும். உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் மாதுளம் பூவிற்கு இருப்பதால். உஷ்ண உடல் வாகு உள்ளவர்கள் சாப்பிடலாம்.  
வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மாதுளம் பூவிற்கு உள்ளதால், வயதுக்கு வந்த பெண்களுக்கு தர, ஆரோக்கியம் மேம்பட்டு உடல் பலப்படும். மாதுளம் பூவைத் துவையல் செய்து சாப்பிட்டால் மேற்கண்ட நன்மைகளை அடையலாம்.
தேவையானவை
மாதுளம் பூ-100கிராம்
மிளகு, சீரகம், -தலா 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு -6 பல்
கறுப்பு உளுந்து-2டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கையளவு
பச்சை மிளகாய்-2
எண்ணெய் , உப்பு- தேவைக்கு ஏற்ப

pomengranate flower

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும். லேசாக வதங்கியதும் கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல், நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து இறுதியில் பொடியாக நறுக்கிய மாதுளம் பூவைப் போட்டு வதக்கவும். இதை உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இந்த துவையல் உடல் ஆரோக்கியத்திற்கு உன்னதமானது. மாதுளம் பூவைப் போட்டு வதக்க ஆரம்பித்ததும், நீண்ட நேரம் அடுப்பில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், மாதுளம் பூவின் சத்துக்கள் குறைந்து விடும்.

2018 TopTamilNews. All rights reserved.