• October
    20
    Sunday

Main Area

Main



நிரவ் மோடி ஜாமின் மனு தள்ளுபடி..தேர்தலுக்காக நாடு கடத்துகிறது பாஜக; காங்., சாடல்!

நிரவ் மோடி
நிரவ் மோடி

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்திலேயே, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

நிரவ் ,மோடியை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கிய மத்திய அரசு, அவருக்கு எதிராக இன்டர் போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீசும் விடுத்தது.

அதேசமயம், நிரவ் மோடி பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் லண்டனில் வசிப்பதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'தி டெலிகிராப்' செய்தி வெளியிட்டது. அவர் வசிக்கும் குடியிருப்பின் மதிப்பு ரூ.73 கோடி எனவும், அதன் வாடகை ரூ.15.5 லட்சம் எனவும் அதில் தெரிவித்திருந்தது.

nirav modi

இதையடுத்து, நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த மனுவில் சமீபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து நிரவ் மோடி லண்டனில் இன்று கைது செய்யப்பட்டார்.

தனது கைதை தொடர்ந்து நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதன் மீது ஆஜரான அவரது வழக்கறிஞர் இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக வாதிட்டார். ஆனால், ஜாமின் மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிரவ் மோடியை வருகிற 29-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலை மனதில் வைத்து நிரவ் மோடியை பாஜக நாடு கடத்துகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பாஜக அரசு தான நிரவ் மோடியை நாட்டை விட்டு தப்பிக்க உதவியது. தற்போது அவர்களே அவரை நாடு கடத்துகின்றனர். தேர்தலுக்காக மட்டுமே அவர் நாடு கடத்தப்படுகிறார். தேர்தலுக்கு பின்னர் அவரை அனுப்பி விடுவர் என்றார்.

priyanka gandhi

இது தான் பாஜக அரசின் சாதனையா? நிரவ் மோடியை வெளிநாட்டுக்கு தப்பித்து போக வழிவகை செய்தது யார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா கூறுகையில், நிரவ் மோடி விவகாரத்தில் உண்மையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, பாஜக நன்மதிப்பை பெற்றுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. நிரவ் மோடி லண்டனில் இருப்பதை 'தி டெலிகிராப்' நாளிதழே வெளிக்கொண்டு வந்தது. பிரதமர் மோடியோ அவரது அரசின் கேள் இயங்கும் நிறுவனங்களோ இல்லை என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.