இக்காலகட்டத்தில் அனைத்து வயதினரும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குறிப்பாக 21 வயதிற்குக் கீழ் இருக்கும் இளம் தலைமுறையினர். இவர்கள் மதுவிற்கு அடிமையாகாமல் இருப்பதைத் தடுப்பதற்காக 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கக் கூடாது என்ற விதி டாஸ்மாக்கில் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், 21 வயதுக்குக் கீழ் உள்ள பல பேர் மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் ஊழியர்களும் விதியை மீறி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனைத் தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் டாஸ்மாக்கில் மது வாங்கக் கூடாது, அவர்களுக்கு விற்பனை செய்யவும் கூடாது. அவ்வாறு அந்த நபர் 21 வயதிற்குக் கீழ் இருக்கலாம் என விற்பனையாளர்களுக்குச் சந்தேகம் எழுந்தால் அவர்களின் அடையாள அட்டை , பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை வைத்து அவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்ற விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதே போல், வயது குறைவாக இருந்து மது வாங்க வருபவர்களிடம் இருந்து அவரது முகவரி,பெயர் உள்ளிட்ட விவரங்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாவட்ட மேலாளர்கள் இதனைக் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு டாஸ்மாக் மதுக் கடைகளிலும் இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கென தனி நோட் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விதிகளை மீறி மது விற்பனை செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் பிறகு அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.