சுழன்றடித்த பண்ட் சூறாவளி… கொளுத்தி எடுத்த பாண்டியா – திணறிய இங்கிலாந்து!

 

சுழன்றடித்த பண்ட் சூறாவளி… கொளுத்தி எடுத்த பாண்டியா – திணறிய இங்கிலாந்து!

இந்தியா டெஸ்ட், டி20 கோப்பைகளைக் கைப்பற்றிவிட்டது. ஒருநாள் கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை முடிவுசெய்யும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. வழக்கம் போல கோலி டாஸ் தோற்க பட்லர் பவுலிங்கை தேர்வுசெய்தது. இங்கிலாந்து ஸ்பின்னர்களாக உள்ளே கொண்டுவர, இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களை உள்ளே கொண்டுவந்தது. முக்கியமான ஆட்டம் என்பதால் நடராஜன் பிளேயிங் 11இல் இடம்பெற்றார்.

Image

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஹித்தும் தவானும் 100 ரன்கள வரை விக்கெட் விடாமல் ஆடினார்கள். அணி 103 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் ரசீத் பந்தில் வீழ்ந்தார். இன்னொரு புறம் நன்றாக ஆடிய தவான் அரைசதம் அடித்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். யாரும் எதிர்பாரா விதமாக கோலியும் 7 ரன்களில் வெளியேற அவருக்குப் பின்னாலே குட்டி கோலி கேஎல் ராகுல் அதே 7 ரன்களில் நடையைக் கட்டினார். 157 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற இக்கட்டான சூழலில் சூறாவளி பண்டுடன் பலே பாண்டியா கைகோர்த்தார்.

Image

இரண்டு பட்டாசுகளும் சேர்ந்து வெடித்ததில் இங்கிலாந்தின் பந்துகள் சிக்சர், ஃபோர்களாகப் பறந்தன. அதிரடியாக ஆடிவந்த பண்ட் 78 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதற்குப் பின் துறுதுறுவென ஆடிய பாண்டியா 64 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த வளர்ந்துவரும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ரெண்டு காட்டு காட்டி 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் போன வேகத்தில் டெய்லெண்டர்கள் வரிசையாக நடையைக் கட்டினர். முடிவில் 48.2 ஓவர்களுக்கு 329 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் 2 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ், சாம் கரண், டோப்லே, மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.