கொழுப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும் மாங்காய்!

 

கொழுப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும் மாங்காய்!

கோடை தொடங்கிவிட்டாலே தர்பூசணி, கிருணி, நுங்கு, மாம்பழத்தின் சீசனும் தொடங்கிவிடும். மாம்பழத்தை விரும்புவது போல பலரும் மாங்காயையும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மாங்காய் என்றாலே நாக்கில் எச்சில் ஊறாத நபர் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அதன் புளிப்புச் சுவை நம்மை ஈர்க்கிறது.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்து உள்ளது. அதனால் மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும். மாங்காயாகச் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

கொழுப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கும் மாங்காய்!

மாங்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதனுடன் வைட்டமின் ஏ, பி6, வைட்டமின் கே ஆகிய ஊட்டச்சத்துக்களும், மக்னீஷியம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்களும். அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. மேலும் மாங்கிஃபெரின், கேடசின், அந்தோசயனின், குவெர்செட்டின், பென்சோயிக் அமிலம் உள்ள அமிலங்கள் இதில் நிறைவாக உள்ளன.

கோடைக் காலத்தில் அதீத வெப்பம் காரணமாக உடலில் இருந்து சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச் சத்து வெளியேறும். மாங்காய் சாப்பிடுவது இதைத் தடுக்கும். மேலும் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்கும்.

இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, இ, ஆன்டிஆக்சிடண்ட் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். இந்த வைட்டமின்கள் உடலில் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியைத் தூண்டும். சருமத்தின் மூலம் கிருமிகள் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தும்.

நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல், செரிமானக் குறைபாடு ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தும் தன்மை மாங்காய்க்கு உண்டு. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மார்னிங் சிக்னெஸ் பிரச்னைக்கு தீர்வாக மாங்காய் உள்ளது. இது செரிமான மண்டலத்தில் உள்ள நெதிகளின் சுரப்பைத் தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மாங்காயில் வேறு எந்த காய்கறியிலும் இல்லாத மாங்கிஃபெரின் என்ற ஆன்டி ஆக்சிடண்ட் நிறைவாக உள்ளது. இது உடலில் கொலஸ்டிரால், டிரைகிளசரைட், கொழுப்பு அமிலங்கள் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், மாம்பழத்தில் உள்ள மக்னீஷியம், பொட்டாசியம் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.

மாங்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் சில புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் ஈறு நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வைட்டமின் ஏ இருப்பது பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது.