கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

 

கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் 700-க்கும் அதிகமான மாடுகள் வரத்தாகின. கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டுச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகளை விற்பனைக்கு அழைத்து வருவது வழக்கம். கடந்த வாரம் புரெவி புயல் மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்த நிலையில், இன்று கூடிய சந்தையில் 700-க்கும் அதிகமான மாடுகள் வரத்தாகின.

கருங்கல்பாளையம் கால்நடை சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

இவற்றில் 450 பசுமாடுகளும், 200 எருமை மாடுகளும், 50-க்கும் மேற்பட்ட வளர்ப்பு கன்றுகளும் அடங்கும். ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகள், மாடுகளை அதிகளவு வாங்கி சென்றனர். உள்ளாட்சி தேர்தல் காரணமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. சந்தைக்கு வந்த 90 சதவீத மாடுகள் விற்பானையாகின. இவற்றில் பசுமாடுகள் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை விற்பனையானது. அதேபோல் எருமை மாடுகள் 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலும், கன்றுகள் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலும் விற்பனையாகின.