டெய்லர் கடை கழிவு துணிகளில் மாஸ்க் தைத்து ஏழைகளுக்கு வழங்கும் சூரத் தம்பதியினர்

 

டெய்லர் கடை கழிவு துணிகளில் மாஸ்க் தைத்து ஏழைகளுக்கு வழங்கும் சூரத் தம்பதியினர்

குஜராத்தில் ஒரு தம்பதியினர் டெய்லர் கடைகளில் மீதமாகும் சிறு சிறு துணிகளை வாங்கி அதில் மாஸ்க் தைத்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என்றாகி விட்டது. அதேசமயம் லாக்டவுனால் வருவாய் ஆதாரத்தை இழந்த கூலி தொழிலாளர்களால் மாஸ்க்கை விலைக்கு வாங்கி அணிவது என்பது சிரமமாக உள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஹனுமான் பிரஜாபத் என்பவரும் அவரது மனைவி ரத்தன் பென்னும் தையல் கடைகளில் டெய்லர்களால் வெட்டப்பட்டு நிராகரிக்கப்படும் சிறு சிறு துண்டு துணிகளை வாங்கி அதில் மாஸ்க் தைத்து அவற்றை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

டெய்லர் கடை கழிவு துணிகளில் மாஸ்க் தைத்து ஏழைகளுக்கு வழங்கும் சூரத் தம்பதியினர்
ஹனுமான் பிரஜாபத்

4 மாதங்களாக சூரத்தில் நகரில் சுமார் 6 ஆயிரம் முககவசங்களை வசதி குறைந்தவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இது தொடர்பாக ஹனுமான் பிரஜாபத் கூறுகையில், நகரில் உள்ள டெய்லர் கடைகளில் மீதமான துணிகளை வாங்கி வருவேன். நானும் எனது மனைவியும் அவற்றை மாஸ்க் தயாரிக்க பயன்படுத்துவோம். கடந்த 4 மாதங்களில் நானும், என் மனைவியும் சுமார் 6 ஆயிரம் மாஸ்க்குகளை தைத்து விநியோகம் செய்துள்ளோம்.

டெய்லர் கடை கழிவு துணிகளில் மாஸ்க் தைத்து ஏழைகளுக்கு வழங்கும் சூரத் தம்பதியினர்
மாஸ்க்

எங்களது பணியை பற்றி கேள்விப்பட்டு, ராஜஸ்தான் கிராமபுறங்களில் உள்ள மக்களுக்கும் மாஸ்க் வழங்குவதற்காக தொண்டு அமைப்பான நிஷ்காம் கரம் சேவை அமைப்பு எங்களை நாடியது. தற்போது கிராமப்புறங்களில் மாஸ்க் விநியோகம் செய்ய அவர்களுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். மாஸ்க்குக்கான எலாஸ்டிக் மற்றும் நூலுக்கான செலவினத்தை அவர்கள் எங்களுக்கு தருகிறார்கள் என தெரிவித்தார். தொண்டு நிறுவனம் இது குறித்து கூறுகையில், லாப நோக்கம் இல்லாமல் அவர் எங்களுடன் பணியாற்றுகிறார். அவரின் உதவியுடன் நாங்கள் இதுவரை ராஜஸ்தான் கிராமபுறங்களுக்கு 3 முதல் 4 ஆயிரம் மாஸ்க்குகளை அனுப்பி உள்ளோம். அவருக்கு மேலும் 5 ஆயிரம் மாஸ்க் தைக்க ஆர்டர் வழங்கியுள்ளோம் என தெரிவித்தது. தன்னலம் கருதாமல் பணியாற்றும் சூரத் தம்பதியனரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.